விவசாயத்திற்கு குடும்பத்தினரின் பங்களிப்பும் ஆதரவும் கண்டிப்பாக அவசியம். அதுவும் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் ஆகும். மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகர் மாவட்டம், பெண்ட்காவ் என்ற கிராமத்தை சேர்ந்த சவிதா என்ற பெண் இயற்கை விவசாயத்தில் அசத்தி வருகிறார்.

இது குறித்து சவிதா கூறுகையில், ”17 வயதில் திருமணமாகி இந்த கிராமத்திற்கு வரும்போது எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. நான் விவசாயம் செய்வேன் என்று ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. நான் நகரத்தில் வளர்ந்தவள். திருமணத்திற்கு பிறகு எனது கணவருடன் தோட்டத்திற்கு சென்று விவசாயத்தை கற்றுக்கொண்டேன். அந்நேரம் என்னால் விவசாய நிலத்தில் சரியாக நடக்கக்கூட தெரியாது. பல நேரங்களில் தவறி கீழே விழுந்திருக்கிறேன். முதன் முதலில் என்னை களை எடுக்க தோட்டத்தில் இறக்கிவிட்டார்கள். எனக்கு அந்த வேலை தெரியாமல் இருந்தது. இதனால் என்னை பார்த்து அனைவரும் சிரித்தனர். அந்நேரம் என்னால் ஒரு கிலோ பருத்தி மட்டும்தான் பறிக்க முடிந்தது. ஆனால், இப்போது 80 கிலோ வரை பறித்து விடுகிறேன்.
விவசாயத்தில் பெரிய அளவில் வருமானம் இல்லாததை தெரிந்துகொண்டு, அதற்கு காரணம் என்னவென்று ஆய்வு செய்தேன். அதிகப்படியான செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் அதிக செலவு ஏற்படுவது தெரிய வந்தது. இச்செலவை குறைக்க வேண்டுமென்றால், அது இயற்கை விவசாயத்தால்தான் முடியும் என்று நினைத்தேன். அதனால் இயற்கை விவசாயத்திற்கு மாற முடிவு செய்தேன். இதற்காக தனியார் அமைப்பு நடத்திய பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டேன். இதன் மூலம் விவசாயத்திற்கு மண்புழு உரத்தை பயன்படுத்த ஆரம்பித்தோம்.
பூச்சிக்கொல்லி மருந்துக்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்த ஆரம்பித்தோம். இதன் மூலம் செலவு கணிசமாக குறைந்தது. அதேசமயம் மகசூலும் அதிகரித்தது. எனது விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கினேன். அதன் பிறகு ‘விவசாயத்தில் பெண்கள்’ Women In Agriculture என்ற பெயரில் மற்றொரு பேஸ்புக் பக்கத்தையும் தொடங்கினேன். அதில் எங்களது விவசாய அனுபவங்களை பகிர்ந்து வருகிறோம். தேவைப்படுபவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சியும் கொடுத்து வருகிறோம்.

இதோடு அருகிலுள்ள மக்களிடம் விவசாய தகவல்களை பகிர்ந்து கொள்ள தனியாக வாட்ஸ் ஆப் குரூப்களையும் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.
10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சவிதா, இப்போது தங்களது கிராமத்து பெண்களுக்கு இணையத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி கொடுத்து வருகிறார். அதோடு பெண்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்தையும் கிராமத்தில் தொடங்கி இருக்கிறார்.
சவிதாவின் பேஸ்புக் பக்கத்தை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பெண் விவசாயிகள் ஆவர். சவிதா விவசாயத்தில் செய்த சாதனை குறித்து கேள்விப்பட்ட மும்பை ஐ.ஐ.டி நிர்வாகம் அவரை மும்பைக்கு வரவழைத்து ஐ.ஐ.டி-யில் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வைத்து கெளரவித்துள்ளது.
சவிதா தனது மாவட்டத்தில் 900 பெண்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றி இருக்கிறார். பேஸ்புக் மூலம் தன்னை பின் தொடர்பவர்களுக்கு இயற்கை விவசாயம், புதிய விவசாய தொழில்நுட்பம், அறுவடை உள்பட விவசாயம் தொடர்பாக அனைத்தையும் ஆன்லைன் மூலம் கற்றுக்கொடுக்கிறார். அவரின் ஆன்லைன் பயிற்சி திறமையை பார்த்த பேஸ்புக் நிறுவனம் சவிதாவை குர்கிராமில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு வரவழைத்து கவுரவித்தது. அதோடு அவருக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை பரிசாக கொடுத்தது. அந்த போனைத்தான் சவிதா இப்போதும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
சவிதாவிடம் பயிற்சி பெற்ற மீனா சாப்ளே என்ற பெண் கூறுகையில், ”நான் படித்தவள் என்றாலும், இப்போதும் விவசாயம் குறித்து கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். சவிதா எனக்கு இயற்கை விவசாயம் குறித்த அனைத்தையும் கற்றுக்கொடுத்து இருக்கிறார். அதோடு அவரது பேஸ்புக் பக்கத்திலும் என்னை உறுப்பினராக சேர்த்திருக்கிறார். சைக்கிள் கூட ஒட்டத்தெரியாத எனக்கு ஸ்கூட்டர் ஓட்டும் அளவுக்கு திறமை கொடுத்து உற்சாகப்படுத்தியவர் சவிதா” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.