கடந்த 2 வாரங்களாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போராளிக் குழுவுக்கு மத்தியிலான போரில் இஸ்ரேலின் தாக்குதலில் தற்போது வரை, 2,360 குழந்தைகள் உட்பட 5,791 பேரும், இஸ்ரேலியர்கள் 1400 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நேற்று காஸா மீது நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஐ.நா பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது. அதில், போர் நிறுத்ததுக்கான கோரிக்கையை உலகநாடுகள் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இஸ்ரேலின் பிரதமர் மகன் குறித்த தகவல் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரது மூன்றாவது மனைவி சாராவுக்கும் பிறந்த மகன் யாயிர் (32). இஸ்ரேலில் கடும் போர் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் இஸ்ரேலில் இல்லாமல் அமெரிக்காவில் உல்லாசமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் அவர் இருக்கும் புகைப்படத்தை தனது வலைதளப்பக்கத்தில் பகிர்ந்ததின் மூலம் இந்த செய்தி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை இருக்கிறது. இதில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலரும் தற்போது நடைபெற்று வரும் போருக்காக நாடு திரும்பி ராணுவத்தில் இணைந்துவரும் நிலையில், இவர் மட்டும் போரின் போது நாட்டில் இல்லாமல் உல்லாசமாக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பொதுவாகவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் யாயிர் நெதன்யாகு 2018-ல் ‘அனைத்து இஸ்லாமியர்களும் வெளியேறும் வரை இஸ்ரேலில் அமைதி இருக்காது’ என்று கருத்து பதிவிட்டு கடும் கண்டனத்துக்கு உள்ளானார். அப்போதே அவரது பேஸ்புக் கணக்கு 24 மணி நேரம் முடக்கப்பட்டது. அதன்பிறகு, “இஸ்ரேலின் பிரதமரும் எனது தந்தையுமான பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு தொழிலதிபருக்கு உதவுவதற்காக 20 பில்லியன் டாலர் எரிவாயு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தார்” என வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, நெதன்யாகு தனது மகனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன், இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யாயிருக்கு 34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது தொடர் சர்ச்சைகளை தொடர்ந்தே நெதன்யாகு மற்றும் அவரது மனைவி வற்புறுத்தலால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்றார். ஆனால், போர் சூழலிலும் நாடு திரும்பாமல் இருந்து வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து இஸ்ரேலுக்காக போரில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் ஒருவர் Times பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,”யுத்தக் களத்தில் நாங்கள் இருக்கும்போது யாயிர் மியாமி கடற்கரையில் உல்லாசம் அனுபவித்துவருகிறார். இஸ்ரேலின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் நாங்கள் அல்ல. ஆனாலும், நாங்கள் குடும்பம், வேலை என அனைத்தையும் விட்டு போரில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால் அவர்….” என விமர்சித்திருக்கிறார்.

காஸா எல்லையில் போர் களத்தில் இருக்கும் ராணுவ வீரர், “நான் ராணுவத்தில் இல்லை. வேறொரு பணி செய்துகொண்டிருந்தேன். ஆனால், குடும்பம், வேலையை விட்டுவிட்டு இந்த நெருக்கடியான நேரத்தில் எனது நாட்டு மக்களை கைவிடக் கூடாது என்பதற்காக போரில் கலந்துகொண்டேன். ஆனால், பிரதமரின் மகன் எங்கே… அவர் ஏன் இஸ்ரேலில் இல்லை? இஸ்ரேலியர்கள் ஒருங்கிணைந்து இருக்க வேண்டிய நேரமிது. பிரதமரின் மகன் உட்பட ஒவ்வொருவரும் இப்போது இங்கே போர் பணி புரிய வேண்டும்” எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இஸ்ரேலிய ஊடகங்கள் “Where is Yair” எனச் செய்தி வெளியிட்டுவருகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.