கரூர்: அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சார்பதிவாளர் சக்திவேலிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,17,500 கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி க.இமயவரம்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாமியப்பன் மற்றும் உதவி ஆய்வாளர்கள், போலீஸார் என 6 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது சார்பதிவாளர் சக்திவேலிடம் இருந்து கணக்கில் வராதரூ.1,17,500 கைப்பற்றப்பட்டு பணத்தின் விபரங்கள் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அலுவலர்கள், பத்திர எழுத்தர் உள்ளிடோரிடமும் மாலை 6 மணிக்கு தொடங்கி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.