புதுடில்லி, ”மாலத்தீவிலிருந்து இந்திய படையினர் வெளியேற வேண்டும்,” என, அந்நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆசிய நாடான மாலத்தீவில், கடந்த செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தற்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது முய்சுவிடம் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, மாலத்தீவின் புதிய அதிபராக, நவ., 15ல், முகமது முய்சு, 45, பதவியேற்க உள்ளார்.
இப்ராஹிம் முகமது சோலி, இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு உடையவர். ஆனால், தற்போது வெற்றி பெற்றுள்ள முகமது முய்சு, சீன ஆதர வாளர். தேர்தல் பிரசாரத்தின் போதே, சீனாவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், முகமது முய்சு நேற்று கூறியதாவது:
மாலத்தீவு தற்போது முழு சுதந்திரத்துடன் இருக்க விரும்புகிறது.
இங்கு இந்திய ராணுவத்தினர் முகாமிட்டுஉள்ளதால், மாலத்தீவின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அதனால், மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்.
மாலத்தீவில் மற்ற நாட்டின் ராணுவத்தினரை இனி அனுமதிக்க முடியாது. அவர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்திய அரசு அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். இதில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
இந்திய ராணுவத்தினரை வெளியேற்றுவதால், சீனா அல்லது மற்ற நாட்டின் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறுவது தவறான தகவல். வேறு எந்த நாட்டின் ராணுவத்தினருக்கும் இங்கு அனுமதி அளிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலத்தீவில், நம் ராணுவ வீரர்கள் ரேடார் நிலையங்களையும், கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர்.
மேலும், நம் போர்க்கப்பல்கள் மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ரோந்து செல்கின்றன.
மாலத்தீவின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில், நம் நாடு அதிக முதலீடு செய்துள்ளது.
இந்திய பெருங்கடல் தீவு நாடான மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்துவதில், நம் நாட்டிற்கும், சீனாவுக்கும் இடையே தொடர்ந்து போட்டி நிலவி வந்தது.
இதுவரை நம் நாட்டின் கையே மாலத்தீவில் ஓங்கி இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்