கரப்பானும் சுப்புடு சுந்தரமும் – சிறுவர்களுக்கான சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

“சிங்காரபுரி” காவிரி கரையின் செழிப்பால் மகிழும் ஒரு வளமான நாடு! அதை ஆண்டு வந்த “வேம்புலியோன்” எனும் அரசன் மிகவும் தயாளகுணம் கொண்ட சிறந்த மன்னன்! அவன் மக்களின் மேல் பேரன்பு கொண்டு அவர்களுக்கு மிகவும் குறைவான வரிகளை விதித்து, அவர்களை கண்ணென பாதுகாத்து வந்தான்.

பெரும் வள்ளண்மை குணம் கொண்ட மாவீரன்! அவன் தன் அரசவையில், புலவர்க்கும் புரவலர்க்கும், பொன்னையும் பொருளையும் வாரிவழங்கி, பசி பஞ்சம் பட்டினி இல்லாத சிறந்த ஆட்சி பரிபாலனம் செய்து வந்தான்!

அந்நாட்டு மக்கள் அளவுக்கு அதிகமான செல்வ செழிப்பில் வாழ்ந்ததால், உழைப்பை மறந்து சோம்பேரிகளாக மெல்ல மாறத் துவங்கினர்!

அரசனுக்கு சேரவேண்டிய குறைந்த வரிப்பணத்தைக்கூட செலுத்துவது இல்லை! அரசனும் அவர்களை வற்புறுத்தி வசூலிப்பதும் இல்லை. இதனால் “அரசு கஜானா” மெல்ல காலியாக துவங்கியது.

Representational Image

மக்கள், சுத்தம் சுகாதாரம் பற்றி கவலை கொள்ளாது, கேளிக்கை, கும்மாளம் என்று சோம்பி கிடந்ததால், ஊரே குப்பை கூளமாகி, சுகாதார சீர் கேடுகள் வரத் தொடங்கின! குறிப்பாக…

கரப்பான்பூச்சிகள் தொல்லை மிகவும் அதிகரிக்க துவங்கியது.. தொட்ட இடமெல்லாம் கரப்பான்கள்! எங்கு நோக்கினும் கரப்பான்கள் என பெருக தொடங்கின! மக்கள் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் சூதாட்டம், கொண்டாட்டம், என ஜாலியாக இருந்தனர்.

ஒருகட்டத்தில், கரப்பான் தொல்லை உச்ச பட்சத்தை அடைந்து, அவர்கள் உண்ணும் உணவிலும், குடிக்கும் நீரிலும் கூட, அவை மொய்க்க தொடங்கியது! போதாத குறைக்கு இரவில் வீடு முழுதும் பறந்து பறந்து, அவர்கள் தூக்கத்தையும் கெடுத்தது! இதனால் காய்ச்சல் , வயிற்றுபோக்கு என நோய்கள் மெல்ல பரவ ஆரம்பித்தது!

மக்கள் பொறுமை இழந்து அரசனிடம் முறையிட்டனர்! மன்னன் மிகவும் வருந்தி, தன் ஆஸ்தான “விகடகவி” யான “சுப்புடு சுந்தரத்தை” அழைத்து மந்திர ஆலோசனை நடத்தினான்! மன்னனின் கவலையை புரிந்து கொண்ட

அதி புத்திசாலியான, சுப்புடு, மன்னனிடம் இரகசியமான ஒரு திட்டத்தை வகுத்து கொடுக்க., மன்னனும்,அதை ஆமோதித்தான்!

Representational Image

அடுத்தநாள் காலை …

பட்டு பீதாம்பர உடையணிந்து ,வைர வைடூரியங்கள், உடல் முழுக்க ஜொலிக்கும் ,பணக்கார “வைத்திய திலகம்” ஒருவன், தன் உதவியாளனுடன் அந்த நாட்டுக்கு விஜயம் செய்து “நான் ஒரு பிரபல மருத்துவ நிபுணன். நான் கரப்பான்களை கொண்டு தயாரிக்கப்பட்டு, தீராத நோய்களையும் குணப்படுத்தும், “சர்வரோக நிவாரணி” லேக்கியம், ஒன்றை கண்டு பிடித்து உள்ளேன்! 

இந்த ஊரில் கரப்பான்கள் அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டு மகிழ்ச்சி பொங்க ஓடோடி வந்து உள்ளேன்! நீங்கள் கரப்பான்களை பிடித்து கொடுத்தால் ஒவ்வொரு கரப்பானுக்கும் ஒரு “வராகன்”  விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன்” என தண்டோரா போட்டு ஜனங்களுக்கு தெரியப்படுத்தினான்.

ஜனங்கள்  ” ஆஹா! கரும்பு தின்ன கூலியா?” என மிகவும் குஷியாகி

கரப்பான்களை கொத்து கொத்தாய் பிடித்து, அவனிடம் வரிசையில் நின்று, விற்று மகிழ்ச்சியுடன் “வராகன்கள்” பெற்று சென்றனர்! அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு கொட்டகையில் தங்கி, ஒரு ராட்சஸ பெட்டியில் அந்த கரப்பான்களை பாதுகாப்பாக வைத்துகொண்டான்.! மக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை களைந்து, கரப்பான்களை 

அலைந்து திரிந்து தேடித்தேடி கண்டுபிடித்து வராகன்களாக மாற்றி  மகிழ்ந்தனர்!

ஒரு வாரம் சென்றதும்,…

அவன் “இன்றிலிருந்து ஒரு கரப்பானுக்கு 10 வராகன்கள் தரப்படும்” என தண்டோரா போட, மக்கள் மேலும் உற்சாகமாகி, அடித்து பிடித்து வீடுகளை மிக நன்றாக சுத்தம் செய்து கரப்பான்களை  வேட்டையாடி நீண்ட வரிசையில் நின்று , அவற்றை விற்று வராகன் பெற்று சென்றனர்! 

தண்டோரா

அடுத்த வாரம்… 

அவன், “இன்றுமுதல் ஒரு கரப்பானுக்கு, 

100 வராகன்கள் தரப்படும்” என அறிவிக்க, மக்கள் கரப்பான் வேட்டையில் மேலும் உக்கிரமாக ஈடுபட்டனர்! ஆனால் பெரும்பாலானவை ஏற்கனவே பிடிக்கப்பட்டு விட்டதால், அவை கிடைப்பது புதையல் கிடைப்பது போல் அரிதாகி விட்டது! ஊரில் ஒரு கரப்பான்  கூட இல்லாமல் ஊரே சுத்தமாகி நறுமணம் வீசியது! 

கரப்பான்களை தேடித்தேடி அலைந்து கண்டுபிடித்து பெரும் தொகையை மக்கள் பெற்று மகிழ்ந்தனர்!

அதற்கு அடுத்த வாரம்,.. 

“இன்றுமுதல் ஒரு கரப்பானுக்கு 1000 வராகன்கள் தரப்படும்” என அவன் அதிரடியாக அறிவிக்க! மக்கள் நாட்டை

 மேலும் மேலும் சுத்தப்படுத்தி, இண்டு இடுக்குகள், என எல்லா இடங்களிலும் அவற்றை தேடினர்.. ஆனால் அவை கிடைப்பது குதிரை கொம்பாகிப்போனது.

இச்சமயத்தில்…

அவன் உதவியாளன் மெல்ல ரகசியமாக மக்களை, தனித்தனியே அணுகி “இப்போது வைத்தியர் ஊரில் இல்லை! அவசர வேலையாக எங்கோ சென்றுள்ளார். ஆனால் நீங்கள் பிடித்து கொடுத்த காரப்பான்கள் அனைத்தும், என்னிடம் ராட்சஸ பெட்டியில் பத்திரமாக உள்ளன. வைத்தியர் வருவதற்குள், நீங்கள் என்னிடம் ஒரு கராப்பானுக்கு 500 வராகன்கள் வீதம் செலுத்தி, யாருக்கும் தெரியாமல், வாங்கி கொள்ளுங்கள்!

பிறகு வைத்தியர் வந்ததும் , நீங்கள்

அவரிடம் அவற்றை தலா 1000 வராகன்களுக்கு விற்று பெரும் இலாபம் அடையலாம்” என்று கூற, மக்கள் ,ராவொடு ராவாக இருட்டில் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து, ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தெரியாமல், ரகசியமாக வந்து ஒரு கரப்பானுக்கு 500 வராகன்கள் கொடுத்து, வாங்கி சென்று ,தத்தம் வீட்டில் தங்கம்போல பத்திரப்படுத்தி வைத்தனர்!

ஆனால் நாட்கள் பல சென்றும் வைத்தியரோ!

அவன் உதவியாளரோ, வரவே இல்லை!

பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் இறுதியாக தாங்கள் அனைவரும ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, ஒற்றுமையாக ஒன்று கூடி பேசி, அத்தனை, கரப்பான்களையும் ஒரு பெரிய குழியில் கொட்டி தீயிட்டு கொளுத்தி அழித்தனர்!

இதனால ஊர் மிக மிக சுத்தமாகி சுகாதாரமாகி மக்கள் நோய்நொடி இன்றி இன்பமாக செழிப்புடன் வாழ்ந்தனர்.

பின் குறிப்பு: அரசனும்,

சுப்புடுவும் தான்…

மாறுவேடத்தில் வைத்தியரும்,

அவன் உதவியாளருமாக, வந்து இந்த தந்திரம் செய்தது நாட்டு மக்களுக்கு தெரியாது..!

ஒவ்வொரு கரப்பானுக்கும், சுமார் 500 வாராகன் இலாபம் கிடைத்ததால் அரசு “கஜானா” நிரம்பி வழிந்தது! அரசன் சுப்புடுவை பாராட்டி பல பரிசுகளை ரகசியமாக தந்தான்.

அரசுக்கு கிடைத்த இலாபப்பணத்தை கொண்டு ,மக்கள் நலனுக்காக மன நிறைவுடன் செலவு செய்தான்! மக்களும் நோய்நொடி நீங்கி, சோம்பல் விடுத்து, சுறுசுறுப்புடனும் உழைத்து சந்தோஷமாக வாழ்ந்தனர்!

(முற்றும்)

மரு உடலியங்கியல் பாலா.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.