புதுடெல்லி: மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வரும் 31-ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பியாக மஹுவா மொய்த்ரா உள்ளார். இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தகேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மஹூவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அண்மையில் அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பிநிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார்அளித்தார். அவரது பரிந்துரையின்பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதன்படி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் நேற்று காலை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். குழுவின் தலைவர் வினோத் கே சோங்கர் இருவரிடமும் விசாரணை நடத்தி, முக்கிய ஆதாரங்களை பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து மஹுவா மொய்த்ரா வரும் 31-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.