திருவனந்தபுரம்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய பேரணியில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், பாலஸ்தீனத்துக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் உள்ள கட்சிகளும், எதிரணியில் உள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள கட்சிகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஐக்கிய ஜனநாயக முன்னணியின் பிரதான கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோழிக்கோட்டில் நேற்று பேரணி நடத்தியது. இதில், சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பாலஸ்தீனத்துக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. எனினும், இதனை மறுத்துள்ள சசி தரூர், தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே பேசிதாக விளக்கம் அளித்துள்ளார். தான் பேசிய பேச்சின் சில பகுதிகளை மட்டும் எடுத்து திரித்து வெளியிடுவதாக அவர் எதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ளார். தரூரின் விளக்கத்தை ஏற்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சசி தரூரின் பேச்சை விமர்சித்து சிபிஎம் செயற்குழு உறுப்பினர் எம்.ஸ்வராஜ் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “மத்திய கிழக்கில் தற்போது பற்றி எரியும் பிரச்சினை தொடங்கியதற்கு ஹமாஸ்தான் காரணம் என சசி தரூர் குறிப்பிட்டார். மேலும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் என்பது நியாயமான பதில் நடவடிக்கை என அவர் கூறினார். அதேநேரத்தில், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத தேசம் என்று குறிப்பிட சசி தரூர் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.