இஸ்லாமாபாத்: “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பெண்களுக்கு எதிராக பேசியது தவறு” என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீப்-க்கு நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்றார். பல ஆண்டுகள் அங்கேயே இருந்த அவர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு கடந்த வாரம் நாடு திரும்பினார்.
அவரை வரவேற்கும் விதமாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய நவாஸ் ஷெரீப், “பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் கூட்டத்துக்கு வந்திருக்கும் பெண்களைப் பாருங்கள். மரியாதைக்குரிய அவர்கள், இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தலைவர்கள் பேசுவதை கவனிக்கிறார்கள். ஆனால், இம்ரான் கான் கட்சி நடத்தும் கூட்டங்களில் பங்கேற்கும் பெண்களோ இசைக்கு நடனமாடுகிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்பதையும், என்ன சொல்லவில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என கூறி இருந்தார்.
அவரது பேச்சுக்கு அரசியல் ரீதியில் கடும் கண்டனம் எழுந்தது. நவாஸ் ஷெரீப் தனது மகள் மரியம் மட்டும்தான் அரசியலில் இருக்க வேண்டும் என கருதுகிறாரா, பாகிஸ்தான் மகள்கள் அரசியலில் இருக்கக் கூடாது என கருதுகிறாரா என பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இந்த விவகாரம் அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவையிலும் எதிரொலித்துள்ளது. அவையில் பேசிய இம்ரான் கான் கட்சி எம்பி வாலித் இக்பால், “பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை நவாஸ் ஷெரீப் கற்றுக்கொள்ள வேண்டும். எம்க்யூஎம் கட்சியின் தலைவர் அல்தாப் ஹுசைனும் பெண்களுக்கு எதிராக பேசி பின்னர் மன்னிப்பு கோரி இருக்கிறார்” எனக் குறிப்பிட்டார்.
அப்போது பேசிய மேலவை தலைவர் சாதிக் சஞ்சரானி, நவாஸ் ஷெரீப் பேசியதை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த வாலித் இக்பால், “நான் அரசியலாக்கவில்லை. பாலியல் ரீதியாக பெண்களைத் தாக்குவது பாகிஸ்தான் அரசியலில் புதிதல்ல. நவாஸ் ஷெரீப் கட்சியினருக்கும் இது புதிதல்ல. சமீபத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்த க்வாஜா ஆசிப் நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தையைப் பயன்படுத்தி பிடிஐ (இம்ரான் கான் கட்சி) பெண் உறுப்பினரை திட்டினார்” எனக் குறிப்பிட்டார்.