பொதுமக்களின் போராட்ட எதிரொலி? – மதுரை கிரானைட் குவாரி ஏலம் ஒத்திவைப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி, திருச்சுனை, அய்யாபட்டி கிராமங்களில் கிரானைட் குவாரி தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா கடந்த 11-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்தனர். இந்நிலையில் கிரானைட் குவாரி ஏல அறிவிப்பை கண்டித்தும் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தை ரத்து செய்யக் கோரியும், சேக்கிபட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் திடலில் நேற்று காலை முதல் 2-வது நாளாக பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா கிரானைட் குவாரி ஏல அறிவிப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சேக்கிபட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை கிராமங்களில், அரசுப் புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள தகுதிவாய்ந்த பலவண்ண கிரானைட் கற்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்று ஏல அறிவிப்பு மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.4 நாள்:03.10.2023-ன்படி 31.10.2023 அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக நலன் கருதி 31.10.2023 அன்று நடைபெற இருந்த பொது ஏலம், ஒரு மாத கால அளவுக்கு ஒத்திவைக்கப்பட்டு, 30.11.2023 அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரானைட் குவாரி ஏல அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் திடீரென ஏல தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரானைட் கற்களை வெட்டி எடுத்து பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழுப்பு ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்து 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கடந்த 10 ஆண்டுகளாக மதுரையில் கிரானைட் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.