ராய்காட்: “உங்களால் ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையெனில், அந்த வாக்குறுதியை கொடுக்கவே கூடாது” என மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடுமையாக சாடியிருக்கிறார்.
மராத்தா சமூகத்தினரை சமூக, கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward – SEBC) அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அமைதி ஊர்வலம், தொடர் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை அவர்களை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, மராத்தா சமூக தலைவர்களின் ஒருவரான மனோஜ் ஜராங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜல்னாவில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இதையடுத்து, செப்டம்பர் 1-ம் தேதி போலீசார் இங்கு நடத்திய தடியடி நடத்தியது பேசுபொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து, மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை தீவிரமடைந்ததையொட்டி, அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேயை நேரில் சென்று சந்தித்து மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து கடந்த மாதம் 14-ந் தேதி ஜாரங்கே தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். அதோடு இந்த மாதம் 24-ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று காலக்கெடு கொடுத்திருந்தார். அது தற்போது முடிவடைவத்திருக்கிறது.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜராங்கேயை சந்தித்து பேசினார்கள். ஆனால், என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்கு காலக்கெடு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த காலக்கெடுவுக்குள் எந்த வேலையும் செய்து முடிக்கப்படவில்லை. உங்களால் ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையெனில், அந்த வாக்குறுதியை கொடுக்கவே கூடாது” என்றார்.