கோவை: நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி. பிரமோத்குமார் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (அக்.27) சரணடைந்தார்.
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு 2009-ல் செயல்பட்ட ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் 58,571 பேரிடம், ரூ.930.71 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) வழக்கை விசாரித்து, நிறுவன இயக்குநர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.171.74 கோடி அபராதம் விதித்து 2022-ல் தீர்ப்பளித்தது.
இதற்கிடையில், மோசடி வழக்கில் நிதி நிறுவன இயக்குநர்களை காப்பாற்றுவதற்காக ரூ.2.50 கோடி லஞ்சம் பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ தனியே வழக்குப் பதிவு செய்தது. எனினும், கடந்த 10 ஆண்டுகளாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. இது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 4-ம் தேதி வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், அதற்கு முன்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யுமாறும் கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
ஆனால், குற்றச்சாட்டு பதிவு செய்ய 2 முறை அழைப்பு விடுக்கப்பட்டும், தற்போது கரூரில் உள்ள செய்தித்தாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐ.ஜி. பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, பிரமோத்குமாரை கைது செய்து, 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரன்ட் பிறப்பித்து, சிபிஐ-க்கு கோவை சிபிஐ நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு இன்று (அக்.27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரமோத்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்ட்ட முன்னாள் டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட மற்ற 4 பேரும் ஆஜராகினர். தொடர்ந்து, பிரமோத்குமார் தரப்பில் பிடிவாரன்ட்டை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் நவம்பர் 4-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பிடிவாரன்ட்டை ரத்து செய்தார்.
மேலும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் பிரமோத்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இருதரப்பு விசாரணை வரும் 31-ம் தேதி தேதி நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்குமாறும் காவல் ஆய்வாளர் மோகன் ராஜ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.