ஜெருசலேம்,
Live Updates
-
27 Oct 2023 5:10 AM GMT
வடக்கு காசா எல்லைக்குள் நுழைந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதல்
வடக்கு காசா எல்லைக்குள் நேற்று இரவு நுழைந்த இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தியுள்ளது. காசா முனையின் பெட் ஹனொன் மற்றும் அல்புரிஜி அகதிகள் முகாமில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை.
-
27 Oct 2023 3:09 AM GMT
பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது.
-
27 Oct 2023 2:51 AM GMT
21வது நாளாக தொடரும் போர்:
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 21வது நாளாக நீடித்து வருகிறது.
-
26 Oct 2023 11:34 PM GMT
இந்திய பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் – ஜோ பைடன் குற்றச்சாட்டு
டெல்லியில் கடந்த மாதம் ‘ஜி20’ மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்கான மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிவித்தார்.
சீனாவின் திட்டத்துக்கு மாற்றாக…
‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வழித்தடம் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே கடல், ரெயில் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்படவுள்ளது.
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு மாற்றாக கருதப்படும் இந்த புதிய வழித்தடத்தின் மூலம் சரக்கு பரிவர்த்தனைக்கான புதிய வழியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் 20 நாட்களாக போர் நடந்து வருகிறது.
ஹமாஸ் தாக்குதலுக்கு காரணம்
இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பேசினார். அப்போது அவர், “இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஹமாஸ் தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால், என்னுடைய உள்ளுணர்வு இந்த தகவலை என்னிடம் சொல்கிறது” என்றார்.
-
26 Oct 2023 10:43 PM GMT
தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை – இஸ்ரேல் ராணுவம்
தரைவழியாக சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் பலர் கொன்று குவிக்கப்பட்டதாகவும், அவர்களின் பதுங்கு குழிகள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
எனினும் முழுமையான தரைவழி தாக்குதலை இன்னும் தொடங்கவில்லை என்றும், இந்த நடவடிக்கையை தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, “காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எப்போது, எப்படி என்பதை நான் விரிவாகக் கூறமாட்டேன். ஆனால், ஹமாசின் இலக்குகளை அழிக்க, காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்” என்றார்.
-
26 Oct 2023 10:36 PM GMT
காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள்
பாலஸ்தீனத்தின் மேற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதோடு, 1,650 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே காசா மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்க ஆயுத்தமாகி வருகிறது. இதற்காக காசா எல்லையில் ஆயிரக்கணக்கான பீரங்கிகளையும், பல்லாயிரக்கணக்கான துருப்புகளையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து பல மணி நேரம் தாக்குதல் நடத்தின. அதன் பின்னர் பீரங்கிகள் மீண்டும் இஸ்ரேல் எல்லைக்கு திரும்பி விட்டன. இதனை உறுதிப்படுத்திடும் விதமாக இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிகள் காசா பகுதிகளுக்குள் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
-
26 Oct 2023 9:58 PM GMT
ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் – இஸ்ரேல் சூளுரை
இதற்கு முன்னரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 முறை போர் ஏற்பட்டது. ஆனால் அந்த போர்கள் இந்த அளவுக்கு பாதிப்பை சந்தித்ததில்லை.
அதற்கு காரணம் போர் தொடங்கிய சில நாட்களிலேயே ஏதேனும் ஒரு தரப்பு சண்டை நிறுத்தத்தை அறிவிக்க, மற்றொரு தரப்பு அதை ஏற்று தாக்குதலை கைவிடும்.போர் முடிவுக்கு வந்துவிடும்.
ஆனால் இந்த முறை இருதரப்புமே தங்களின் இலக்கை எட்டும் வரை போர் தொடரும் என கூறி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ஹமாசை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தபோவதில்லை என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
அதற்கு ஏற்றபடி காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காசா என அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகின்றன.
6,500 பேர் பலி; 17,500 பேர் படுகாயம்
24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 750 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள் என கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், தாக்குதல்களில் காசா மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றனர். இதனால் முந்தைய போர்களில் இல்லாத அளவுக்கு உயிரிழப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை காசாவில் 6,500-க்கும் அதிகமானோர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
மேலும் சுமார் 17,500 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 1,600-க்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளில் புதைந்து மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
26 Oct 2023 9:53 PM GMT
காசா மீது 20 நாட்களாக தொடரும் குண்டுமழை
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர்.
அதோடு தரை, கடல், வான் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். இதில் 1,400 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 200-க்கும் அதிகமானோரை ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரை அறிவித்து, காசா மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது. அதன்படி கடந்த 20 நாட்களாக காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது.