வலி இருந்தாலும், இது எனது கடமை” – இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த செய்தியாளர் மீண்டும் பணிக்கு திரும்பினார்

காசா: இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளர் தனது குடும்பத்தினரின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு இன்று தன்னுடைய பணிக்கு திரும்பியிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்-இஸ்ரேல் போருக்கு இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதில் அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை பலிகொடுத்து வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலில் பல செய்தியாளர்களும் பலியாகியுள்ளனர். காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை என பொதுமக்கள் கதறி வருகின்றனர்.

இந்த நிலையில், கத்தாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளராக பணியாற்றியவர் வல் அல் ததோ (Wael al-Dahcouh). இவரின் மனைவி, மகன், மகள், பேரன் என நால்வர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டது.

காசா மீதான தாக்குதல் தொடங்கிய பின்னர் இடம்பெயர்ந்த வல் அல் ததோவின் குடும்பத்தினர், நுசைரத் (Nuseirat) என்ற அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர். அப்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இவரின் மனைவி, மகன், மகள், பேரன் என நால்வர் இறந்துள்ளனர். ததோ விவரமறிந்து அல் அக்ஸா மருத்துவமனைக்கு வந்து, தனது இறந்த மகனின் சடலத்தைக் கைகளில் ஏந்தி கதறி அழும் புகைப்படம் வெளியாகி மக்களை உறையச் செய்தது. அப்போது கதறிய ததோ, எங்களைப் பழிவாங்க எங்கள் குழந்தைகளைக் கொன்று குவிக்கின்றனர் என்றார் கனத்த நெஞ்சோடு.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை பலிகொடுத்த அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளர் வல் அல் ததோ, தனது குடும்பத்தினரின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு இன்று தன்னுடைய பணிக்கு திரும்பியிப்பது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து அவர், “எங்கும் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருக்கிறது. வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்னுடைய மனதில் இன்னும் வலி இருக்கிறது. இருந்தாலும், மீண்டும் கேமரா முன்பு வந்து பேசுவது, சமூக ஊடகங்கள் மூலம் மக்களை தொடர்பு கொள்வது எனது கடமை என உணர்ந்தேன்’’ என்றார். காசா மக்கள் பலரும் அவரின் சேவையை பாராட்டி, அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.