94வது ஆஸ்கர் விருதுக்கான இந்திய அரசின் அதிகாரபூர்வ பரிந்துரை, ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் டைகர் விருது, எண்ணற்ற உலகத் திரைப்பட விழாக்கள் என உலா வந்த ‘கூழாங்கல்’, ஒரு வழியாக இன்று சோனி லைவ் ஓ.டி.டி வழியாக மக்கள் பார்வைக்கும் வந்து சேர்ந்துள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணபதி (கருத்தடையான்) தன்னோடு சண்டையிட்டுச் சென்ற மனைவியை மீண்டும் அழைத்து வர அவளது கிராமத்திற்குச் செல்கிறான். அந்தப் பயணத்திற்காகத் தனது அப்பாவி மகனான வேலுவையும் (செல்லப்பாண்டி) பள்ளி வகுப்பிலிருந்து பாதியிலே அழைத்துச் செல்கிறான். அந்த நண்பகல் நேரத்துப் பயணத்தில் அவர்களைச் சுற்றி அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை விருதுகளைக் குவிக்கும் உலக சினிமாக்களுக்கே உரிய ‘ரியலிச’ பாணியில் சொல்லியிருப்பதே இந்த ‘கூழாங்கல்’.

முரட்டுத்தனமும், மூர்க்கமும் கொண்டு எதைப்பற்றியும் சிந்திக்காமல் வாயைத் திறந்தாலே ஆபாசமும், ஆணாதிக்கமும் தலைக்கேறிச் சுற்றித்திரியும் குடிவெறியனாகவே வாழ்ந்திருக்கிறார் கருத்தடையான். ஒருபுறம் இவர் தன் நடிப்பினால் கோபத்தை வரவைத்தால், மறுபுறம் வெகுளித்தனத்தாலும், அப்பாவியான முகபாவனைகளாலும் கழிவிரக்கத்தை வரவைக்கிறார் மகனாக நடித்துள்ள செல்லப்பாண்டி. இது தவிர எலியைச் சுட்டுத் தின்னும் குடும்பம், டீச்சர், பேருந்தில் உள்ள நபர்கள் என ஒரு கூக்கிரமாத்திற்கே சென்று வந்த அனுபவத்தைத் தரும் அளவிற்கான நடிப்பினை அனைவரும் கடத்தியிருக்கிறார்கள்.
தரிசு நிலங்களும், வெக்கையும் சூழ்ந்த புழுதிக் காட்டில் நடந்து செல்லும் இருவரை பின் தொடர்ந்து செல்லும் கேமரா கோணங்கள், நமக்கே வியர்த்துக் கொட்டும் அளவுக்கான ஒளியுணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. விக்னேஷ் குமுலை மற்றும் ஜெயா பார்த்திபனின் ஒளிப்பதிவு உலக சினிமாவுக்கே உரித்தான பொறுமையையும், வறண்ட நிலத்திற்கே நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் சென்ற தாகத்தையும் உண்டாக்குகிறது. இது எதையும் தொந்தரவு செய்யாத கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு படத்திற்குக் கூடுதல் பலம் என்று சொல்லலாம். பெரும்பாலான இடங்களில் இசை இல்லாத போது, நிசப்தத்தைக் கலைக்கும் ஹரி பிரசாத்தின் சவுண்ட் டிசைன், கரடுமுரடான இந்தப் பயணத்தைக் காலடி சத்தங்களின் மூலம் நம்மை ஒன்றச் செய்துள்ளது.

குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் நீர் ஊற்றின் சத்தத்தில் ஒட்டு மொத்த பயணத்தின் பாரத்தையும் மனதிலிருந்து இறக்கி வைக்கிறது. இதில் ஆங்காங்கே வந்து போகும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பாலைவனச் சோலையின் நீரூற்று. பெட்டிக்கடை, குடிசை வீடு, குக்கிராமத்தில் இருக்கும் சுவரில்லா பள்ளி என யதார்த்தத்தை மீட்டிருக்கிறது நிஜன் – சிஞ்சுவின் கலை இயக்க கூட்டணி.

கதையைப் பிரதானமாக எடுத்துக் கொண்டு, அதை இரு கதாபாத்திரங்களின் மூலம் கட்டி எழுப்பி அதன் பின்னணியிலே நம்மை அலைய வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். பெரும்பாலும் வசனங்களை வைத்து விளக்காமல் காட்சிகளின் மூலமே வாழ்வியலைக் கடத்தியிருக்கிறார். ஆணாதிக்கமும், மது வெறியும் கொண்ட மனித மிருகத்தை, வறண்ட நிலத்தின் சுட்டெரிக்கும் வெயில் பயணம் கூட அலைக்கழித்துச் சாந்தப்படுத்தும் என்னும் திரைமொழி, பிரமிக்க வைக்கிறது.
உச்சக்கட்ட காட்சியாக, தண்ணீர் தாகம் எடுக்காமல் இருக்க, சிறுவன் பயணத்தின் நடுவே ஒரு கூழாங்கல்லை வாயில் போட்டு நடந்து வருகிறான். அனைத்து பிரச்னைகளையும் அடியும் உதையும் வாங்கி, ஒரு வழியாக அந்த நாளின் முடிவில் வீடு வந்து சேர, ஏற்கெனவே வீட்டில் சேமித்து வைத்திருக்கும் கூழாங்கல்லுக்கு மத்தியில் வாயிலிருக்கும் கூழாங்கல்லை எடுத்து வைக்கிறான். அந்தக் குவியல், இதற்கு முன்னர் அந்தப் பிஞ்சு நெஞ்சமும், அவனது தாயாரும் சந்தித்த குடும்ப வன்முறைக்கான சாட்சியமாகவும் ஆணாதிக்கத்தின் ஒட்டு மொத்த குறியீடாகவும் மாறி நிற்பது தேர்ந்த திரைமொழியின் உச்சம்.

ஒரு சிறுகதையின் சாரத்தை எடுத்து, அதைச் செவ்வியல் தன்மையோடு படைத்திருக்கிறது படக்குழு. இதைத் தைரியமாக வெளியிட்டு, உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்குப் பாராட்டுகள். ஒட்டுமொத்தமாக ஆணாதிக்கம், குடும்ப வன்முறை, மது அடிமைத்தனம் என்று ஊறிக்கிடக்கிற அழுக்கான குட்டையின் மீது இந்த `கூழாங்கல்’லை வீசி சலனத்தை ஏற்படுத்தியிருக்கும் படக்குழுவினருக்குப் பாராட்டுகள்!