திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் மருது சகோதரர்கள் நினைவுநாள் விழா கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, “இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் பெயர்ப் பட்டியலைத் தாருங்கள் எனத் தமிழ்நாடு அரசிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர்களோ 40-க்கும் குறைவான பெயர்களை கொண்டப் பட்டியலைத்தான் என்னிடம் கொடுத்தார்கள்.

பிறகு, நானாகத் தேடிப் படித்ததில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தமிழ்நாட்டில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகப் போராடியிருப்பதைத் தெரிந்துகொண்டேன். அந்த வகையில், முத்துராமலிங்கத் தேவர் ஒரு மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், அவரை ஒரு சாதியின் தலைவராக இன்று சுருக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களெல்லாம் மறக்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இங்கு ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டு அப்படிச் செய்தார்கள்” எனப் பேசியிருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. தி.மு.க பொருளாளரும், நாடாளுமன்றக் கழகக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு ஆளுநருக்கு,`ஆளுநர் மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசிவருவது, அரசியல் சாசனத்துக்கு அவர் செய்கின்ற துரோகம்!

ஆளுநர் என்ற மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதியாக, ஒன்றிய பா.ஜ.க அரசின் ஊதுகுழலாகச் செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக்கொண்டிருக்கிறார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், வாட்ஸ்அப் வதந்திகள்போலப் பரப்புவதையாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனக் காட்டமாகப் பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில், நமது விகடன் இணையப்பக்கத்தில், “தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்களின் வரலாற்றை, தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்திருக்கிறார்கள் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து…” குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதற்கு விருப்பத்தேர்வாக ‘அவதூறானது’ – ‘உண்மை’ – ‘அறியாமை’ என்ற மூன்றுத் தேர்வைக் கொடுத்திருந்தோம்.

இதில் நமது வாசகர்கள் அளித்த வாக்கின்படி,” தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்களின் வரலாற்றை, தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்திருக்கிறார்கள் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து… அவதூறானது என 51 சதவிகித வாசகர்களும், உண்மை என 31 சதவிகித வாசகர்களும், அறியாமை என 16 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
நமது விகடன் இணையதள பக்கத்தில் தற்போது தாக்குதலுக்குள்ளான காவலர் விவகாரம்: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச் சீட்டு வேண்டும் என்ற சீமானின் வேண்டுகோள்” குறித்த கருத்துக்கணிப்பு நடந்துவருகிறது. வாசகர்கள் https://www.vikatan.com/ கிளிக் செய்து தங்கள் கருத்தைத் தெரிவிக்க முடியும்.