“புதிய மகாராஷ்டிராவை உருவாக்க திரும்ப வருவேன்!” – வைரலான பட்னாவிஸ் வீடியோ; அதிர்ச்சியில் ஷிண்டே

மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றும், மீண்டும் முதல்வராக முடியாமல் போனது. மாறாக சரத்பவாரோடு கூட்டணி வைத்துக்கொண்டு உத்தவ் தாக்கரே முதல்வரானார். கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்துவிட்டு பா.ஜ.க.கூட்டணி மீண்டும் பதவிக்கு வந்த போது தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி நெருக்கடி காரணமாக பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். கட்சி தலைமை கட்டாயப்படுத்தி கேட்டுக்கொண்டதால் பட்னாவிஸ் இம்முடிவை எடுத்தார். பா.ஜ.க கூட்டணி அரசில் இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் அணியும் சேர்ந்துள்ளது.

இதனால் வரும் தேர்தல்களில் மூன்று கட்சிகள் சேர்ந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. வரும் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 50 முதல் 60 தொகுதிகள் வரை கொடுத்துவிட்டு எஞ்சிய தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஷிண்டேயை கழற்றிவிட்டுவிட்டு பட்னாவிஸை முதல்வராக்கலாம் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதனை உறுதி செய்யும் விதமாக பா.ஜ.க. சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அமைந்துள்ளது. 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது தேவேந்திர பட்னாவிஸ் ‘திரும்ப வருவேன்’ என்று கூறுவார். அந்த வீடியோவை பா.ஜ.க. சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. அதில், `புதிய மகாராஷ்டிராவை உருவாக்க திரும்ப வருவேன்’ என்று பட்னாவிஸ் தெரிவிப்பது போன்று வீடியோ அமைந்துள்ளது. இதனால் மீண்டும் பட்னாவிஸ் முதல்வராகப்போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. அந்த வீடியோவை பார்த்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் அதிர்ச்சியடைந்தார் என்கிறது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள்.

ஆனால் அந்த வீடியோ வைரலானதால் அதனை பா.ஜ. சோசியல் மீடியாவில் இருந்து அகற்றிவிட்டது. அதோடு அந்த வீடியோவை கட்சி தரப்பில் வெளியிடவில்லை என்றும், கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் வெளியிட்டுவிட்டார் என்று பா.ஜ.க.தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் தலைதூக்கி இருக்கும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சரியாக கையாளவில்லை என்று பா.ஜ.க. கருதுகிறது. எனவே இப்போராட்டம் வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்று கருதுவதாக பா.ஜ.க. மூத்த நிர்வாகி தெரிவித்தார். அதனால் சோதனை ஓட்டமாக வீடியோவை வெளியிட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

`குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவை ஆள முடிவு’

மகாராஷ்டிரா மற்றும் மும்பையை குஜராத்தில் இருந்து நிர்வாகம் செய்ய ஏக்நாத் ஷிண்டே – தேவேந்திர பட்னாவிஸ் முடிவு செய்துள்ளதாக ஆதித்ய தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”தற்போதுள்ள பா.ஜ.க கூட்டணி அரசு மகாராஷ்டிராவை விட குஜராத்தைப்பற்றித்தான் அதிகம் கவலைப்படுகிறது. வேதாந்தா, பாக்ஸ்கான், மருந்து தயாரிக்கும் தொழிற்பேட்டை குஜராத்திற்கு செல்ல சாதகமாக இருந்தார்கள்.

ஆதித்ய தாக்கரே

உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியை மும்பையில் இருந்து குஜராத்திற்கு மாற்றவும் அனுமதித்தனர். இப்போது மும்பையில் உள்ள வைர மார்க்கெட்டை குஜராத்திற்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் மகாராஷ்டிரா தலைமை செயலகத்தைக்கூட குஜராத்திற்கு மாற்றிவிடுவார்கள். முதல்வர் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் மும்பை, மகாராஷ்டிராவை குஜராத்தில் இருந்து ஆட்சி செய்ய விரும்புகின்றனர்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.