PAK v SA: பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்பட்டாரா நடுவர்? அது என்ன Umpire's Call?

சேப்பாக்கத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பைப் போட்டி கடைசி வரை திரில்லாகச் சென்று, இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் நடுவர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முடிவு வழங்கிவிட்டதாக இணையதளத்தில் பயங்கரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. போட்டியில் என்ன நடந்தது? நிஜமாகவே நடுவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்பட்டார்களா?

பாகிஸ்தான்

46வது ஓவரின் கடைசி பந்தில்தான் அந்தச் சம்பவம் நடந்திருந்தது. அந்தச் சமயத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றியை எட்ட 8 ரன்கள் தேவைப்பட்டன. கையில் 1 விக்கெட்டை மட்டுமே வைத்திருந்தார்கள். களத்தில் கேசவ் மகாராஜாவும் தப்ரேஸ் ஷம்சியும் இருந்தார். தப்ரேஸ் ஷம்சிதான் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஹரீஷ் ராஃப் அந்த ஓவரில் இங்கிடியை சிறப்பாக வீழ்த்தியிருந்தார். அந்தக் கடைசிப் பந்தையும் ரொம்பவே அழகாக தப்ரேஸ் ஷம்சியை நோக்கி உள்பக்கமாக நன்றாகத் திருப்பி வீசினார். பந்தை எதிர்கொள்ள முடியாத ஷம்சி பேடில் வாங்கினார். உடனே ஹரீஸ் ராஃப் உட்பட பாகிஸ்தான் அணி மொத்தமும் lbw அப்பீல் செய்தார்கள். ஆனால், களநடுவர் அவுட் கொடுக்கவில்லை.

Babar – Harris Rauf

உடனே பாபர் அசாம் ரிவியூவை எடுத்தார். மூன்றாம் நடுவரின் ஆய்வில் பந்து ஸ்டம்பை உரசி செல்வது நன்றாகத் தெரிந்தது. ஆனாலும், மூன்றாம் நடுவர் அதை ‘Umpires Call’ என கொடுத்தார். அதாவது, களநடுவரின் முடிவே இறுதியானது என்றார். களநடுவர் ஏற்கெனவே நாட் அவுட் கொடுத்திருந்ததால் தப்ரேஸ் ஷம்சி தப்பித்திருந்தார். தென்னாப்பிரிக்க அணியும் திரில் வெற்றியைப் பெற்றது.

இந்த இடத்தில்தான் அதிக விமர்சனங்களும் எழுந்துள்ளன. பந்து ஸ்டம்பை உரசுவது தெளிவாகத் தெரிந்தும் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. அம்பயர்களின் தவறான முடிவுகளைக் குறைக்க வேண்டும் என்றுதான் டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறார்கள். அதிலும் அம்பயர்ஸ் கால் என ஒன்று இருப்பது அநியாயமாக இருக்கிறது. ஷம்சிக்கு மட்டும் அவுட் வழங்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும். அவர்களுக்கான அரையிறுதி வாய்ப்பும் பிரகாசமாகியிருக்கும்.

நடுவர்களின் தவறான முடிவுதான் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என இணைய சமூகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்ல முன்னாள் வீரர்களுமே இந்த விஷயத்தை பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

TV Review

“பந்து ஸ்டம்பைத் தாக்கினால் அது அவுட்தான். அதில் அம்பயரின் முடிவை கேட்பதற்கு என்ன இருக்கிறது. பிறகு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்ன பயன்?

இங்கே மோசமான அம்பயரிங் மற்றும் ஐ.சி.சி-யின் மோசமான விதிகளால் பாகிஸ்தான் ஒரு உலகக்கோப்பைப் போட்டியை இழந்திருக்கிறது. ஐ.சி.சி தங்களின் விதிமுறையை மாற்ற வேண்டும்!” என ட்வீட் செய்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.

lbw க்களுக்கு ரிவியூவ் செல்லும்போது இப்போதைக்கு ஒரு முறை பின்பற்றப்பட்டிருக்கிறது. அதாவது அந்த பால் டிராக்கரில் பார்க்கையில் பந்தின் 50% அல்லது அதற்கு மேல் ஸ்டம்பைத் தாக்கியிருந்தால் அவுட் கொடுத்துவிடுவார்கள். 50% க்கு கீழ்தான் பந்து ஸ்டம்பைத் தாக்கியிருக்கிறது எனில் அதை ‘Umpires Call’ என கொடுத்துவிடுவார்கள். அதன்படி களநடுவர் அவுட் கொடுத்திருந்தால் அவுட். இல்லையேல் நாட் அவுட். ஹரீஸ் ராஃப் விஷயத்தில் இதுதான் நடந்தது. அவர் வீசிய பந்துக்கு ரிவியூ சென்று பால் ட்ராக்கரில் பார்க்கையில் பந்து ஸ்டம்பை உரசி செல்வதை போலத்தான் இருந்தது. அதாவது 50% க்கும் குறைவான பந்தின் பகுதிதான் ஸ்டம்பில் பட்டிருந்தது. அதனால்தான் மூன்றாம் நடுவர் ‘Umpires Call’ என கொடுத்தார்.

TV Review

சரி இந்த 50% கணக்கெல்லாம் எதற்கு? ஏனெனில், இப்போது பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் 100% துல்லியமான முடிவை கொடுக்கக்கூடியது இல்லை. ஒரு கணிப்பாகத்தான் பந்து இந்தத் திசையில் பயணித்து இப்படி ஸ்டம்பைத் தாக்கியிருக்கும் என காட்டுகிறது. அதில் கொஞ்சம் தவறு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், இது சாத்தியங்களின் படி காட்டப்படும் கணிப்புதான். இதனால்தான் ‘Umpires Call’ என்கிற விஷயம் கொண்டு வரப்படுகிறது.

இதைத்தான் ஹர்ஷா போக்லேவும் தனது ட்வீட்டில் விரிவாக விளக்கியிருக்கிறார். அதாவது, “அம்பயர்ஸ் கால் என்பதை விளக்க இதுதான் சரியான நேரம். பந்து வீரரின் பேடில் பட்டு எங்கே சென்றிருக்கும் என்பதன் கணிப்பைத்தான் நாம் பார்க்கிறோம். 50% க்கு மேல் பந்து ஸ்டம்பைத் தாக்கியிருந்தால் நாம் உறுதியாகச் சொல்லிவிடலாம் அது அவுட்தான். ஒருவேளை 50%க்கும் கீழ்தான் பந்து ஸ்டம்பைத் தாக்கியிருக்கிறது என்றால் அது சந்தேகம்தான். அது ஸ்டம்பைத் தாக்கியிருக்கவும் செய்யலாம் அல்லது தாக்காமலும் சென்றிருக்கலாம். அந்த மாதிரியான சமயங்களில்தான் ‘Umpires Call’ என்பது பயன்படுகிறது. இதுதான் நியாயமான அணுகுமுறை என நினைக்கிறேன்.

இப்போது பயன்படுத்தப்படும் டெக்னாலஜியால் 100% துல்லியமான முடிவுகளைக் கொடுக்க முடியவில்லை. வருங்காலத்தில் இந்த டெக்னாலஜியிலெல்லாம் நல்ல முன்னேற்றமடைந்து பந்து ஸ்டம்பை உரசினாலே அது 100% சரியானதாக இருக்கும் என தீர்க்கமாக முடிவை அறிவிக்கும் நாள் வரும்” என்றார்.

ஹர்ஷா போக்லேவின் விளக்கம்தான் ரொம்பவே தெளிவானது. ஆனால், இதற்கும் ஹர்பஜன் தனது மறுப்பை தெரிவித்திருக்கிறார். “பந்து ஸ்டம்பில் பட்டாலே அது அவுட்தான். இதை சாதாரணமாகவே புரிந்துகொள்ளலாம். பாகிஸ்தானுக்கு நடந்தது நாளை இந்தியாவுக்கும் நடக்கலாம். ஐ.சி.சி இந்த விதிமுறைகளை மாற்ற வேண்டும். ஒன்று களநடுவரிடம் முழு முடிவையும் கொடுங்கள் அல்லது டெக்னாலஜியை முழுமையாக நம்ப வேண்டும்” என ஹர்பஜன் பதிலளித்திருக்கிறார்.

Babar Azam

“அம்பயர்ஸ் கால் என்பது போட்டியின் ஒரு அங்கம். இந்தப் போட்டியில் அது எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. அவ்வளவுதான்” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமே இந்த விஷயத்தை கூலாகத்தான் ஹேண்டில் செய்திருக்கிறார்.

உங்களைப் பொறுத்தவரை இந்தச் சம்பவத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.