நான்கு தலைமுறை கண்ட “காவியக் கவிஞர்” வாலி

1. பாபநாசம் சிவன் தொடங்கி இன்றைய பா விஜய் வரை எண்ணற்ற கவிஞர்கள் எண்ணிலடங்கா பாடல்களை தந்து கொண்டிருக்கின்ற தமிழ் திரையுலகில், வளமான சிந்தனையோடும், வாலிபம் நிறைந்த சொற்களோடும், வாழ்நாள் முழுவதும் வண்ணத்திரையில் வசந்தம் வீச வைத்த வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் 92வது பிறந்த தினம் இன்று…

2. ஓவியனாய் பயணித்து பின் நாடகத்தை மனம் நாடி, காவியப் பாடல்கள் பல தந்து கலையுலகின் உச்சம் தொட்ட காவியக் கவிஞர் வாலி.

3. பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்ட பைந்தமிழ் பாவலர் வாலி, 1931ல் அக்டோபர் 29 அன்று, சீனிவாச அய்யங்கார் மற்றும் பொன்னம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கராஜன்.

4. எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞராக அடையாளம் காணப்பட்ட வாலி, அவரது பெரும்பாலான படங்களுக்கு அவரின் குணநலன்கள், கொடைத் தன்மை, மற்றும் கொள்கைகளை விளக்கும் கருத்துக்களை, தனது பாடல் மூலம் சொல்லி எம்ஜிஆரின் அன்பை பெற்றார்.

5. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்”, ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கையில்லை”, “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்”, “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்”, “நான் செத்துப் பொழச்சவன்டா எமன பாத்து சிரிச்சவன்டா”, “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” என எம் ஜி ஆருக்காக இவர் எழுதிய அத்தனைப் பாடல்களும் எம் ஜி ஆரின் கொள்கை முழக்கப் பாடல்களாக இருந்து அவருக்கு பெரும் புகழ் சேர்த்தன.

6. கண்ணதாசனோடு கலையுலகில் பயணித்த சமகால கவிஞராக பார்க்கப்படும் வாலியின் பல பாடல்கள் இன்றும் கண்ணதாசனின் பாடல்கள் என கூறுபவர் பலர் உண்டு. “மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்”, “பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா”, “ஒன்னா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்” போன்ற பல வாலியின் பாடல்கள், கவியரசர் கண்ணதாசனின் பாடல் என நினைப்போர் இன்றும் நம்மில் பலர் உண்டு.

7. ஒரு காலத்தில் சரியில்லை என்று நிராகரிக்கப்பட்ட வாலியின் பாடல் பின்னாளில் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து, ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தையும் பிடித்தது. அந்தப் பாடல்தான் “படகோட்டி” படத்தில் இடம்பெற்ற “கொடுத்ததெல்லாம் கொடுத்தான்” என்ற பாடல்.

8. வாலி ஸ்ரீரங்கத்திலிருந்து பாடகர் டிஎம்.சௌந்தரராஜனுக்கு தபால் கார்டில் எழுதிய அனுப்பிய பாடல் தான் பின்னாளில் தெய்வீக மனம் வீச, “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என டிஎம்எஸ் குரலில் புகழ் பெற்றது.

9. காதல், வீரம், பக்தி, தாலாட்டு, தத்துவம், சோகம், பாசம், நய்யாண்டி, குறும்பு என எல்லா உணர்வுகளுக்குமான பாடல்களை அள்ளித்தந்த கவிஞர் வாலி, எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என நான்கு தலைமுறை கலைஞர்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞராகவே வாழ்ந்தும் மறைந்தார்.

10. வெளிநாடுகளில் இருந்து எத்தனையோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாதவர் கவிஞர் வாலி. பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர் இவர் மட்டுமே.

11. கண்ணதாசனிடம் அளவு கடந்த மரியாதையும், நட்பும் கொண்டவர் வாலி. கண்ணதாசன் மரணித்தபோது, “எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேரில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதை புத்தகத்தை கிழித்து போட்டுவிட்டான்” என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்ததில் இருந்து அவர்களது நட்பின் ஆழத்தை அறிய முடியும்.

12. தமிழ் திரையுலகில் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் பயணித்து, 15000க்கும் அதிகமான பாடல்களை எழுதிய ஒரே திரைப்பட பாடலாசிரியர் என்ற பெருமைக்குரிய வாலிபக் கவிஞர் வாலியின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய சிறு குறிப்பினை பகிர்ந்தமைக்கு நாம் பெருமை கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.