நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது இலங்கை உட்பட வளரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாகும்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது இலங்கை உட்பட வளரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாகும்

உலகில் தற்பொழுது காணப்படும் சூழ்நிலையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது, குறிப்பாக இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். உலகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகள், இயற்கை அழிவுகளினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அதிகரித்துவரும் மோதல்களால் மனித சமூகத்துக்கும், கிரகத்துக்கும் தாக்கம் ஏற்பட்டிருப்பதால் இந்த நிலைமை தோன்றியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த சவால்களை வெற்றி கொள்வதற்கு இலங்கை அயராது உழைத்து வருவதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். அங்கோலா நாட்டின் லுவாண்டா நகரில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 147வது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

முன்னெப்போதும் இல்லாத பூகோள சவால்களுக்கு மத்தியில் இலங்கை கடந்த ஆண்டு மிகவும் சவாலான காலகட்டத்தைச் சந்தித்ததாகவும் தெரிவித்த சபாநாயகர், பரவியிலுள்ள சமூக அமைதியின்மை மற்றும் எதிர்ப்புக்களால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகொள்ளும் செயற்பாட்டில் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களை உறுதியாக முன்னெடுத்துச் சென்று அரசாங்கமும், பொது மக்களும் அமைதியான அரசியல் மாற்றமொன்றை நோக்கிப் பயணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 147வது மாநாட்டில் அங்கோலா நாட்டில் ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்றது. எதிர்வரும் சில வருடங்களுக்குள் வறுமையை ஒழிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் 16வது இலக்கான “சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களுக்கான பாராளுமன்ற முறைமை’ என்பது இந்த மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

இந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நளின் பண்டார ஜயமஹா, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ சிந்தக அமல் மாயாதுன்ன, கௌரவ ராஜிகா விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.