பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட சுரேஷ்கோபி

மலையாள திரையுலகில் சீனியர் நடிகரான சுரேஷ்கோபி ஒருபக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் கடந்த பத்து வருடங்களாக அரசியலிலும் பயணித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள கருடா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து அவ்வபோது செய்தியாளர்களை சந்தித்து தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார் சுரேஷ்கோபி. இந்த நிலையில் சமீபத்திய ஒரு சந்திப்பின்போது தன்னிடம் கேள்வி எழுப்பிய ஒரு பெண் பத்திரிக்கையாளரின் தோளில் எதார்த்தமாக கைவைத்து உரிமையுடன் பேசுவது போல பதில் அளித்துள்ளார் சுரேஷ்கோபி.

ஆனால் அவரது இந்த செயல் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோழிக்கோடு கமிஷனர் அலுவலகத்தில் சுரேஷ்கோபி மீது புகார் அளித்துள்ளார் அந்த பெண் பத்திரிகையாளர். இது மீடியாவில் பரபரப்பான செய்தியாக மாறிய சூழலில் உடனடியாக சுதாரித்துக் கொண்ட சுரேஷ்கோபி தான் நடந்து கொண்ட விதம் குறித்து மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.

இது ஓரளவுக்கு பரபரப்பை அடக்கினாலும் ஒரு தேசியக் கட்சியின் முன்னாள் ராஜ்யசபா எம்பி ஆன இவர் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட முயற்சித்து வரும் நிலையில் இவரது இந்த செயலை வைத்து கேரளாவில் ஒரு அரசியல் புயல் கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.