புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.இந்நிலையில், 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி 23 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்த நிலையில், பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. பிகானீர் மேற்கு தொகுதியில் மணீஷ் சர்மா, ஜோத்பூரில் ரோஹித் ஜோஷி, சாப்ரா தொகுதியில் ஆர்.பி. மீனா, பெஹ்ரோ தொகுதியில் ஹர்தன் சிங் குஜ்ஜார், சவாய் மாதோப்பூர் தொகுதியில் முகேஷ் பூப்ரேமி, பாலியில் லால் சிங், கான்பூரில் திபேஷ் சோனி, ராமகரில் விஸ்வேந்தர் சிங் உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர்.