நியூயார்க்: காசா பகுதியில் போர் நிறுத்தம், மனிதநேய அடிப்படையிலான உதவிகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ஐ.நா., பொது சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இடையே போர் நடந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, மற்றொரு மேற்காசிய நாடான ஜோர்டான் சார்பில், ஐ.நா., பொது சபையில் வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. வங்கதேசம், மாலத்தீவுகள், பாகிஸ்தான், ரஷ்யா உட்பட, 40 நாடுகள் இதை வழிமொழிந்தன. இதன் மீதான விவாதம் நேற்று முன்தினம் நடந்தது.
எதிர்ப்பு
‘காசா பகுதியில் பெருமளவில் பொதுமக்கள் உயிரிழப்பதாலும், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாலும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
‘காசா பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து மனிதநேய உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட விவாதத்துக்குப் பின், 193 உறுப்பு நாடுகள் உள்ள ஐ.நா., பொது சபையில், இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, 120 நாடுகள் ஓட்டளித்தன; இதையடுத்து இது நிறைவேறியது. அதே நேரத்தில், 14 நாடுகள் எதிர்த்து ஓட்டளித்தன.
இந்தியா உட்பட, 45 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக இந்த வரைவு தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளும் தீர்மானத்தை கனடா முன்மொழிந்தது. இதை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழிமொழிந்தன.
‘ஹமாஸ் பயங்கரவாதிகள் குறித்தும், அவர்கள் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் வாக்கியங்கள் குறித்தும் தீர்மானத்தில் இடம் பெற வேண்டும்’ என, திருத்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த திருத்தத்துக்கு, இந்தியா உட்பட 88 நாடுகள் ஆதரவு தெரிவித்தன; அதே நேரத்தில், 55 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், 23 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த திருத்த தீர்மானம் தோல்வியடைந்தது.
இதனால், திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் தீர்மானம் நிறைவேறியது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு குறித்தும், பிணைக் கைதிகள் குறித்தும் தீர்மானத்தில் குறிப்பிடப்படாததற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதத்தில் ஈடுபட்டன.
‘ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு குறித்தும், அது நடத்திய தாக்குதல் குறித்தும் தீர்மானத்தில் இடம் பெறாததாலேயே, காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளிக்கவில்லை’ என, நம் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
வாய்ப்பில்லை
இது குறித்து, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி யோஜ்னா படேல் கூறியதாவது:
பயங்கரவாதம் எந்த வகையில் இருந்தாலும், அதை எதிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் எல்லைகள், இனம் அடிப்படையில் வேறுபாடு பார்க்கக் கூடாது.
அக்., 7ல் இஸ்ரேலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை.
பயங்கரவாதிகள் வசம் உள்ள பிணைக் கைதிகள், எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
இரு தரப்பும் மோதலை கைவிட்டு, சுமுகமாக பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டெடுப்பில் இந்தியா பங்கேற்காததற்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதற்கிடையே, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா.,வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் எலின் சொகென் கூறியதாவது:
போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை. ஹமாஸ் பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டும் வரை தாக்குதல் தொடரும்.
ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை சர்வதேச நாடுகள் எப்படி கையாளுகின்றனவோ, அதேபோலத் தான் ஹமாஸ் அமைப்பினரையும் கையாள வேண்டும். எனவே, ஐ.நா., வின் தீர்மானத்தை முழுமையாக நிராகரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்