உலகக் கோப்பையை விடுங்க… இந்த அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல் – முழு விவரம் இதோ!

ICC Champions Trophy Qualification: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் சூழலில், முன்னர் சாம்பியன்ஸ் டிராபி என்ற தொடரும் நடத்தப்பட்டது. இறுதியாக 2017ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அணி வென்றது.

2025இல் சாம்பியன்ஸ் டிராபி

இருப்பினும், 2021ஆம் ஆண்டு நடைபெற இருந்த சாம்பியன்ஸ் டிராபி ரத்து செய்யப்பட்டது. இனி சாம்பியன்ஸ் டிராபி நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. ஆனால், 2021ஆம் ஆண்டில் ஐசிசி மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படும் என அறிவித்தது, 2025 மற்றும் 2029ஆம் ஆண்டில் சாம்பின்ஸ் டிராபி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி  (ICC Champions Trophy 2025)  தொடரை நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் 8 அணிகள் பங்கேற்கும் எனவும், அந்த 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும், ஒரு பிரிவில் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும். அதன்பின், பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

யார் தகுதிபெறுவார்கள்?

அந்த வகையில், நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) தொடரை நடத்தும் பாகிஸ்தான் நீங்கலாக புள்ளிப்பட்டியலில் (World Cup 2023 Points Table) டாப் 7 இடத்தை பிடிக்கும் அணிகள் மட்டும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெறும். அதாவது, பாகிஸ்தான் அணி நேரடியாக தகுதிபெற்றுவிடும். எனவே, நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் ஏழு இடங்களுக்குள் இருந்தது என்றால், 8ஆவது இடத்தில் இருக்கும் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற்றுவிடும்.

ஒருவேளை பாகிஸ்தான் 8ஆவது இடத்தில் நிறைவு செய்தால், முதல் ஏழு அணிகளும் அப்படியே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெறும். இதனால், புள்ளிப்பட்டியலில் 9ஆவது, 10ஆவது இடத்தில் நிறைவு செய்யும் அணி சாம்பின்ஸ் டிராபிக்கு தகுதிபெறாது. தற்போது வங்கதேசம், இங்கிலாந்து அணிகள்தான் முறையே 9ஆவது, 10ஆவது இடத்தில் உள்ளன. இதனால், அவர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நடப்பு உலகக் கோப்பைக்கு தகுதிபெறாத முழு நேர உறுப்பினர்களான மேற்கு இந்திய தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் சாம்பியன் டிராபியிலும் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்யப்போகிறது இங்கிலாந்து?

இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பின் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லரிடம் (Jos Butler) சாம்பியன்ஸ் டிராபி குவாலிஃபிகேஷன் (ICC Champions Trophy Qualification) குறித்து கேட்டதற்கு அவர்,”ஆம், அது எங்களுக்கு தெரியும். மேலும், நாங்கள் விளையாடுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது” என்றார். மேலும் டாப் 8ஆவது இடத்தில் நிறைவு செய்வதன் அவசியம் குறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹாசனும் பேசியிருந்தார். 

சனிக்கிழமை (அக். 28) நெதர்லாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பின் பேசிய ஷகிப் அல் ஹாசன் (Shakib Al Hasan),”குறைந்த பட்சம், கொஞ்சம் சிறப்பாக விளையாட வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட விரும்பினால், நீங்கள் முதல் 8 இடங்களில் நிறைவு செய்ய வேண்டும். எனவே, அதை மனதில் கொண்டு இன்னும் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.