சேலம், மேச்சேரி காவல் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 32 லட்ச ரூபாய் பணத்துடனும், 35 பவுனுக்குக் குறையாத தங்க நகைகளுடனும் சுரேஷ் எனும் நபரை, பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அந்த நபரிடம் இருந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்ததில், சம்பந்தப்பட்ட நபர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தொழிலதிபர் ஒருவரது வீட்டுக்குக் கட்டட வேலைக்குச் சென்றபோது, அங்கிருந்து மேற்கண்ட நகைகள், பணத்தைத் திருடியது தெரியவந்தது. மேலும், அதைத் தனக்கு தெரிந்த ஒருவரிடம் சுரேஷ் கொடுத்திருக்கிறார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், மக்கள் உதவியுடன் சுரேஷைப் பிடித்து மேச்சேரி போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

இது குறித்த தகவல், சேலம் மாவட்டக் காவல்துறை மூலம் திருச்செங்கோடு டவுன் காவல் நிலைய போலீஸாருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த திருச்செங்கோடு போலீஸாருடன் நகை, பணத்துக்கான உரிமையாளரும் பணம் எண்ணும் மெஷினுடன் மேச்சேரி காவல் நிலையத்துக்கு வந்தார். அதன் பின்னர், மேச்சேரி போலீஸார் திருட்டில் ஈடுபட்ட நபரையும், திருட்டுப்போன பணம் மற்றும் நகைகளையும் திருச்செங்கோடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், பணத்தின் உரிமையாளர் 10 நாள்களாக நகை, பணம் காணாமல்போனதைப் பற்றி போலீஸிடம் புகாரே கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் போலீஸாருக்கும் ஒருவேளை கணக்கில் வராத பணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சந்தேகம் இருந்துவந்தது. இது ஒருபுறம் இருக்க, சேலத்திலிருந்து திருச்செங்கோட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பணத்தை, சேலம் போலீஸார் எண்ணிக்கொடுத்ததைக் காட்டிலும், திருச்செங்கோடு போலீஸார் எஃப்.ஐ.ஆரில் குறைவாகப் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த தொழிலதிபர், வேறு வழியின்றி சேலம் சரக டி.ஐ.ஜி-யிடம் இது குறித்து வாய்மொழியாகப் புகார் அளித்தாராம். அதன்பேரில், டி.ஐ.ஜி ராஜேஸ்வரி இரண்டு மாவட்டக் காவல்துறையினரிடமும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து திருச்செங்கோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரனிடம் பேசியபோது, “திருட்டு கேஸ் ஒன்று போட்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் சொல்வது போன்று சேலத்தில் யாரையும் பணம், நகையுடன் பிடிக்கவில்லை. நீங்கள் வேண்டுமானாலும் நேரில் வாருங்கள், தகவல் தருகிறேன்” என்றார்.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணனிடம் பேசியபோது, “சேலம் மேச்சேரியில் பிடிப்பட்ட நபர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் கட்டட வேலைக்குத் தொழிலதிபரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்துதான் பணம், நகை இரண்டையும் திருடி வந்திருக்கிறார்” என்றார்.
இது குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரியிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட புகார் தொடர்பாக விசாரித்துவருகிறேன். விசாரணை முடிந்துதான் எதையும் சொல்ல முடியும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.