”பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புகிறது” – பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

பசும்பொன்: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்,

முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன். தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1,42,80,000 மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12,54,000 மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். தேவர் நினைவிடத்தை மேம்படுத்துவதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களை நினைவு கூர்ந்தார்.

ஆளுநர் மாளிகையா பாஜக அலுவலகமா? தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகையின் எதிரே உள்ள சாலையில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யைப் பரப்புகிறது. ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்கக்கேடானது. இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது திராவிடம். இதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக பலமுறை வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். பிரதமர் மோடியின் கவனத்துக்கும் இதனைக் கொண்டு சென்றுள்ளோம். இப்போது, டி.ஆர்.பாலு எம்.பி.யை டெல்லி அனுப்பியுள்ளோம், தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து அவர் வெளியுறவு அமச்சரை சந்தித்துப் பேசவுள்ளார். இலங்கைக் கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து அவர் வலியுறுத்துவார்” என்று கூறினார்.

முன்னதாக பசும்பொன் வரும் வழியில் இன்று காலை மதுரையில் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தினார். அதேபோல், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.