இது மேத்யூ பெர்ரி (Matthew Perry) தனது ‘Friends, Lovers and the Big Terrible Thing’ என்ற நினைவுக்குறிப்பு நூலில் எழுதியது. ஆம், ஒரு 24 வயது இளைஞனுக்குப் புகழின் உச்சிக்கே செல்லும் கனவுகள் நிறைவேற, பின்னர் போதைப் பழக்கத்தின் விளைவுகளால் அந்தக் கனவு எவ்வாறு சிதைந்தது என்பதின் சுருக்கமான வரிகள் இவை!

நேற்று சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் “சேண்ட்லர் நீ எப்போதும் எங்கள் நினைவிலிருந்தே கொண்டே இருப்பாய்”, “சேண்ட்லர் வீ மிஸ் யூ”. “வில் மிஸ் யூ மிஸ்டர்.பிங்” என ஏராளமான ரசிகர்களின் இரங்கல் குறிப்புகள் வெளிவந்தன. அந்த சேண்ட்லரின் இயற்பெயர் மேத்யூ பெர்ரி. இவர் 1994 – 2004 வரை 10 சீசன்களாகத் தொலைக்காட்சியில் வெளிவந்த சிட்-காம் சீரியஸான ‘FRIENDS’ மூலமாக ‘சேண்ட்லர் பிங்’ என உலககெங்கும் அறியப்பட்டவர். நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது இல்லத்தில் குளியலறை தொட்டியில் மூழ்கி மரணித்துள்ளார். அவரது வயது 54.
`சேண்ட்லர் பிங்’ கதாபாத்திரம் எதையும் வஞ்சப் புகழ்ச்சியோடும், எள்ளலோடும் (Sarcasm) அணுகக்கூடியது. மிகவும் பரபரப்பான சூழலிலும் நகைச்சுவையை உண்டாக்கும் அணுகுமுறை உடையது. அதில் பிரதானமான விஷயம் என்னவென்றால் அதைச் சிரிக்காமலே சொல்லுவதுதான். இதனால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்களைக் கொண்ட கதாபாத்திரமாக அது மாறியது. இதனால் புகழின் உச்சிக்கே சென்றார் மேத்யூ பெர்ரி.
ஆனால், வாழ்க்கை பெரும்பாலான நேரங்களில் முரண்பாடாக இருக்கலாம். தங்கள் கலையால் உலகை ஆண்ட சார்லி சாப்ளின், மைக்கல் ஜாக்சன், மர்லின் மன்றோ, ராபின் வில்லியம்ஸ் போன்ற பல கலைஞர்களின் நிஜ வாழ்க்கை மிகவும் சோகமான நிகழ்வுகளை உள்ளடக்கியது. அவ்வகையில் மேத்யூ பெர்ரியும் அவர்களோடு இணைகிறார்.

ஒரு விபத்துக்குப் பிறகே அவரது வாழ்க்கை தடம் மாறியதென பெரும்பாலான இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால், சிறுவயதிலேயே அவரது பெற்றோருக்கு நடந்த விவாகரத்தே அவரது மனதைப் பெரிதும் பாதித்திருக்கிறது. சொந்த குடும்பத்திலேயே அயலானைப் போல் வாழ்ந்துள்ளார். குறிப்பாக ஐந்து வயதிலிருந்தே, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது தந்தையைப் பார்க்க, மாண்ட்ரியலில் இருந்து விமானத்தில் தனியாகப் பயணம் செய்துள்ளார். அப்போது, “உடன்யாரும் இல்லாத மைனர்” என்று எழுதப்பட்ட பலகையை அணிந்துகொள்ளும் சுழலும் அவர் வாழ்வில் நடந்துள்ளது. இதனால் 14 வயதிலே குடிப்பழக்கம், எதிர்மறை எண்ணங்கள், தனிமை என வாழ்வில் இருள் சூழ, 55 வலி நிவாரணி மருந்துகளை ஒரே நாளில் எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது 24வது வயதில் FRIENDS தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டார். அந்தத் தொடரில் எந்தவித ஆடிஷனும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் இவர்தான் எனச் சொல்கிறது தொடரின் தயாரிப்புக் குழு. அதே நேரத்தில் ஸ்கிரிப்ட்டில் இல்லாமல் அவரே உருவாக்கிய பல காமெடி ஒன் லைனர்கள், இன்றும் மக்களைச் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது என்கிறார் தொடரின் இயக்குநர். அதிலும் குறிப்பாக அவரின் அந்தப் பாத்திரத்தோடு சமகால இளைஞர்கள் பலரும் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது.
இப்படி அந்தத் தொடரின் வெற்றி, ஒரு எபிசோடுக்கு 1 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கும் அளவுக்கு அவரை உயர்த்தியது. அந்தத் தொடர் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அதில் ‘THE TRIUMPH’ (The Ron Clark Story) என்ற தொலைக்காட்சி படத்திற்காக கோல்டன் குளோப் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 1997-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்து அவரது வாழ்வையே திருப்பிப் போட்டது. அப்போது வலி நிவாரணியை அதிகமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தவர், பின்னர் அதற்கு அடிமையாக ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அது பல்வேறு போதைப் பழக்கத்திற்கும் அவரை இட்டுச் சென்றுள்ளது. பின்னர் 28 நாள்கள் போதை பழக்க மறுவாழ்வு மையத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். ஆனால் அவரது குடிப்பழக்கம் தொடர்ந்தே வந்துள்ளது.
2001-ஆம் ஆண்டு ‘FRIENDS’ தொடரின் ஷூட்டிங்கில் கடுமையான வயிற்று வலி ஏற்படத் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுப்பழக்கத்தினால் கணையம் பாதிப்படைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இரு வாரங்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது எடையிலும் தோற்றத்திலும் வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன. 2002-ஆம் ஆண்டில் இரண்டு மாதங்கள் மீண்டும் தொடர் நிறுத்தி வைக்கப்பட, சிகிச்சையிலிருந்து மீண்டு வந்துள்ளார். அப்போது ஒரு நேர்காணலில் தான் போதையிலிருந்து மீண்டு வந்த பயணத்தைப் புத்துணர்வுடன் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு ரசிகர்களின் கண்ணீரோடு ‘FRIENDS’ தொடரும் முடிவுக்கு வந்தது.
போதைப் பழக்கம், மறுவாழ்வு மையம் என்பது சுழற்சி போல அவர் வாழ்வில் மீண்டும் வர, 2011-ஆம் ஆண்டு 2 மாதங்கள் ஒரு மறுவாழ்வு மையத்திற்குச் சென்றார். அப்போது, “நான் மீண்டும் வரும் வரை என்னைக் கிண்டல் செய்து வலைதளங்களில் எழுதுங்கள்” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
அவரது நினைவு குறிப்பில் இரண்டு தசாப்தங்களாக இது குறித்த போராட்டங்களை எழுதும் போது மொத்தம் 6000 முறை இதற்காக கவுன்சலிங் சென்றதாகவும், 65 முறை டீடாக்ஸ் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நகைமுரணாக 9 மில்லியன் டாலரைப் போதைப் பொருளுக்காகவும் செலவழித்துள்ளார். இதன் விளைவு. 18 முறை வயிற்றில் அறுவை சிகிச்சை, குடல் வெடித்து அலறிக்கொண்டே மருத்துவமனையில் அனுமதி, 14 நாள்கள் கோமா, 3 முறை திருமண உறவிலிருந்து பிரிவு என வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் 2021-ம் ஆண்டு, 17 ஆண்டுகள் கழித்து ‘FRIENDS’ ரியூனியன் என்று மீண்டும் தொலைக்காட்சியில் இடம்பெற்றார். அதைத் தொடர்ந்து ‘Friends, Lovers and the Big Terrible Thing’ என்ற தனது போதைப் பழக்கத்தின் நினைவுக் குறிப்பு நூலை 2022-ம் ஆண்டு வெளியிட்டார். அதில் தனது நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் என்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஒரு பாட்கேஸ்டில் பேசியவர், “நான் இறக்கும் போது FRIENDS என்ற தொடரைப் பற்றிப் பேசுவார்கள் என்று எனக்குத் தெரியும். அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஒரு நடிகராக வேலை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல உலகளாவிய வலைதளங்களில் எனது போதை பழக்கத்தினால் கேலி செய்ய மக்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளேன். ஆனால் நான் இறக்கும்போது நன்றாக வாழ்ந்த, அனைவரையும் நேசித்த, எதையோ தேடுபவனாக, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக நினைவுகூரப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.
அதே போலத் தனது நினைவு குறிப்பின் தலையங்கத்தில் புத்தகத்தில் எடுத்தவுடனே “நான் இறந்துவிடுவேன்” என எழுதியிருந்தார். அதை எழுதி முடித்த ஓர் ஆண்டிலேயே அவர் மறைந்து இருப்பது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சொந்த வாழ்க்கை இத்தகைய துயரம் மிகுந்ததாக இருந்தாலும், “I’ll be there for you” (உனக்காக நான் இருப்பேன்!) எனும் ‘FRIENDS’ டைட்டில் பாடலின் வரிகளைப் போல, சிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, என்று எந்த தலைமுறையினர் ‘FRIENDS’ தொடரைத் தட்டினாலும், அங்கே சேண்ட்லர் பிங்காக மேத்யூ பெர்ரி என்றும் நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார்.
நாங்களும் அப்படித்தான் மிஸ்டர் பிங்! சோகமான நாள்களில் சிரிக்க வைத்ததற்கும், இனிமேல் சிரிக்க வைக்கப் போவதற்கும் சேர்த்து நன்றிகள்!