விசாகப்பட்டினம், ஆந்திராவில் இரு பயணியர் ரயில்கள் மோதி, 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பழுதடைந்த இரண்டு தானியங்கி சிக்னல்களில், ராயகடா பயணியர் ரயில் நிற்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள கண்டகபள்ளி அருகே, விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணியர் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த பாலசா பயணியர் ரயிலும், நேற்று முன்தினம் இரவு மோதி விபத்துக்கு உள்ளாகின.
இதில், பாலசா பயணியர் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில், நேற்று முன்தினம் 10 ஆக இருந்த பலி எண்ணிக்கை, நேற்று 14 ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில், ராயகடா பயணியர் ரயிலின் டிரைவர், அவரது உதவியாளர் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இந்த வழித்தடத்தில் செல்லவிருந்த, 39 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது; 24 ரயில்கள் வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில் நேற்று, விபத்துக்கான காரணம் குறித்து, ஏழு பேர் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு நடத்தி, முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதன் விபரம்:
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் பாலசா பயணியர் ரயில் சென்றது.
இந்த வழித்தடத்தில் வந்த ராயகடா பயணியர் ரயில், பழுதடைந்த இரண்டு தானியங்கி சிக்னல்களில் நிற்காமல், பாலசா பயணியர் ரயில் மீது மோதியது. இந்த விபத்துக்கு, ராயகடா பயணியர் ரயலின் டிரைவர், அவரது உதவியாளர் ஆகியோர் தான் காரணம். இருவருமே விபத்தில் இறந்து விட்டனர்.
ரயில்வே விதிகளின்படி, பழுதடைந்த தானியங்கி சிக்னல்களில், ரயில் இரண்டு நிமிடங்கள் நின்று, பின், 10 கி.மீ., வேகத்தில் புறப்பட வேண்டும். இதை ராயகடா பயணியர் ரயில் பின்பற்றாததால் விபத்து ஏற்பட்டது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்ற ஒய்.எஸ்.ஆர். காங்., தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். விபத்து பகுதிக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செல்லவிருந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் காரணமாக அவர் செல்லவில்லை.
இதற்கிடையே நேற்று விபத்து நடந்த பகுதிக்குச் செல்லவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை சந்திக்கவும், ஒடிசா பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சுதம் மராண்டிக்கு, அம்மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன்பட்நாயக் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்