அடுத்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு உதவியால் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் ஆரம்பிக்கப்படும்

வெளிநாட்டு உதவியினால் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது எந்த இடத்திலும் பாரியளவில் வீதிகள் அமைக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சரவைப் பேச்சாளர், வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பெரிதும் சேதமடைந்த இடங்களில் மிகச் சிறிய திருத்தங்களை மாத்திரமே விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகுவும் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் நிதி ஒதுக்கீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்த அமைச்சர், இந்த வீதிகளுக்கான பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகள் வரலாற்றில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆசிய அபிவிருத்தி வங்கி தற்போது அனைத்து கொடுப்பனவுகளையும் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் வரை வீதிகள் முற்றாக அழிந்தாலும் ஆசிய அபிவிருத்தி வங்கி பணம் வழங்காது எனத் தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த வருடத்தில் வெளிநாட்டுக் கடனை எப்படியாவது மறுசீரமைக்க முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.