கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியை அடுத்த களமசேரியில் சாம்ரா சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு, கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவான ‘யெகோவாவின் சாட்சிகள்’ சபை சார்பில் 3 நாட்கள் ஜெபக் கூட்டம் நடைபெற்றது.
இதன் நிறைவு நாளான நேற்று முன்தினம் சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர். காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. சிறிது நேரத்தில், மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு பெண் நேற்று முன்தினமே உயிரிழந்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களில் டோமினிக் மார்ட்டின் (52) என்பவர் கொடைகாரா காவல் நிலையத்தில் நேற்று முன்தினமே சரணடைந்தார். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.