இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரராக கருதப்படும் முகேஷ் அம்பானிக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் முகேஷ் அம்பானிக்கு வந்த கொலை மிரட்டலில் ரூ.20 கோடி கொடுக்கவில்லையெனில் கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தது. கடந்த 28-ம் தேதி மீண்டும் ஒரு கொலை மிரட்டல் வந்தது. அதில் ரூ.200 கோடி ரூபாய் கொடுக்கவில்லையெனில் உனது மரண சாசனத்தில் கையெழுத்திடப்படும் என்று அதில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மிரட்டல்களை தொடர்ந்து ஏற்கனவே அம்பானிக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஒரு கொலை மிரட்டல் வந்திருக்கிறது.

இந்த கொலை மிரட்டலும் இமெயில் மூலமே வந்திருக்கிறது. இம்முறை இமெயில் பெல்ஜியத்தில் இருந்து வந்திருந்தது. ஏற்கனவே அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய சதப் கான் தான் இந்த மிரட்டலையும் விடுத்திருக்கிறானா என்று தெரியவில்லை. மிரட்டல் மெயிலில், `எவ்வளவு பாதுகாப்பு இருக்கிறது என்பது முக்கியமல்ல. எங்களது ஒரு உளவாளியால் கொலை செய்ய முடியும்’ என்று அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மிரட்டலால் மும்பை அல்டமண்ட் ரோட்டில் உள்ள அம்பானியின் இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை சைபர் பிரிவு போலீஸார் பெல்ஜியம் நாட்டிற்கு கடிதம் எழுதி இமெயில் அனுப்பிய நபர் குறித்த விபரங்களை கேட்டுள்ளனர். அம்பானிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது. இது தவிர அம்பானியும் தனது சொந்த பாதுகாவலர்களையும் பாதுகாப்புக்கு வைத்திருக்கிறார். எனவே எந்நேரமும் அம்பானிக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அவர் பயன்படுத்தும் காரும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத கார் ஆகும்.

அம்பானி குடும்பத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவேண்டாம் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.