புதுடில்லி, ‘பினோலெக்ஸ் கேபிள்ஸ்’ நிறுவனம் தொடர்பான வழக்கில் தன் தீர்ப்பை, கம்பெனி சட்ட தீர்ப்பாயம் வேண்டுமென்றே மீறியுள்ளதாகஉச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மின்சார ஒயர்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பினோலெக்ஸ் கேபிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கட்டுப்பாடு தொடர்பாக, உறவினர்களான தீபக் சாப்ரியா மற்றும் பிரகாஷ் சாப்ரியா இடையே பிரச்னை உள்ளது.
இந்நிலையில், தீபக் சாப்ரியாவை, நிறுவனத்தின் செயல் தலைவராக நியமிக்கும் வகையில், ஆண்டு பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக, பிரகாஷ் சாப்ரியா சார்பில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ என, தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதை மீறி, தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ‘தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினர் ராகேஷ் குமார், தொழில்நுட்ப உறுப்பினர் அலோக் ஸ்ரீவத்சவா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என, உச்ச நீதிமன்றம், ‘நோட்டீஸ்’ அனுப்பிஇருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
பினோலெக்ஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், தீர்ப்பாயம் வேண்டுமென்றே அதை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளது; இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினர் ராகேஷ் குமார், பதவி விலகியுள்ளார். தொழில்நுட்ப உறுப்பினர் அலோக் ஸ்ரீவத்சவா மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தீர்ப்பாயம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்