இந்த வீக்னஸூ இருந்தும் இந்தியா இலங்கையை ஜெயித்தது எப்படி?

வான்கடேவில் நடைபெற்ற உலக கோப்பை லீக் போட்டியை இலங்கை அணி முடிந்தளவுக்கு சீக்கிரம் மறந்துவிடும். ஆனால், அது எவ்வளவு நாட்களுக்கு என்பது தான் தெரியவில்லை. அந்தளவுக்கு ஆறாத வடுபோன்ற காயத்தை போட்டு அனுப்பி வைத்திருக்கிறது இந்தியா. முதலில் பேட்டிங் விளையாடி 350 ரன்களுக்கு மேல் குவித்ததோடு மட்டுமல்லாமல், பவுலிங்கில் டாப் கிளாஸை காண்பித்துவிட்டனர். பும்ரா, சிராஜ், ஷமி மூன்றும் பொங்கியெழுந்துவிட்டார்கள். அவர்களின் முன்னால் இலங்கை அணிக்கு மூச்சுவிடகூட நேரம் கிடைக்காமல் அடிமேல் அடியாய் வாங்கி முடங்கியே போய்விட்டது. இதனால் கம்பீரமாக 7வது வெற்றியை பெற்ற இந்திய அணி உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றிருப்பதுடன் புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறது.

இப்படியான இந்திய அணிக்கு வீக்னஸே இல்லையா? என நீங்கள் கேட்கலாம். இந்திய அணிக்குள்ளும் வீக்னஸ் இருக்கிறது. அதனை சரியான நேரத்தில் பலமாக மாற்றிக் கொள்வது தான் இப்போதைய இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. முதல் வீக்னஸ் என்றால் அது ஸ்ரேயாஸ் அய்யர் தான். அவர் இதுவரை நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் பெரியதாக ஜொலிக்கவில்லை. நன்றாக ஆடிக் கொண்டிருந்த போட்டியில் கூட தேவையில்லாமல் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடித்து அவுட்டானார். ஸ்ரேயாஷூக்கு ஷார்ட் பிட்ச் போட்டால் அவுட்டாகிவிடுவார் என எதிரணிகள் கணக்கு போட்டுக் கொண்டிருக்க, நேற்றைய இலங்கை போட்டியின்போது ஷார்ட் பிட்ச் பந்துகளை இலகுவாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார் அவர். இதனால் இமாலய சிக்சர் அடித்ததுடன் 82 ரன்கள் குவித்தார்.  

இரண்டாவது வீக்னஸ் சிராஜ் தான். ஆசிய கோப்பையில் டாப் கிளாஸ் பார்மில் இருந்த அவர் உலக கோப்பை போட்டியில் பவர்பிளேவில் எதிர்பார்த்தளவுக்கு இந்திய அணிக்கு விக்கெட் எடுத்துக் கொடுக்கவில்லை. ஷமி கடந்த மூன்று போட்டிகளில் விக்கெட் எடுத்து கொடுத்ததால் சிராஜ் மீது அதிகமாக ஃபோகஸ் விழவில்லை. இருப்பினும், சிராஜ் பவுலிங்கை யாரும் சுட்டிக்காட்டாமலும் இல்லை. ஆனால் நேற்று ஆரம்பமே விக்கெட்டுடன் ஆரம்பித்து, இலங்கையின் சரிவுக்கு துல்லியமாக ஸ்கெட்சும் போட்டுக்கொடுத்தார். அவரை பின் தொடர்ந்து வந்த முகமது ஷமி இலங்கை அணியை மொத்தமாக வாரி சுருட்டிவிட்டார். 

மூன்றாவது வீக்னஸ் என்னவென்றால் சுப்மான் கில். அவர் ஓப்பனிங் இறங்கினாலும் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே இலங்கை போட்டிக்கு முன்பு வரை அடித்திருந்தார். அவருடைய பேட்டில் இருந்து பெரிய ஸ்கோர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதனால் கட்டாயம் நல்ல இன்னிங்ஸ் ஆட வேண்டிய பொறுப்பில் அவர் இருந்தார். எதிர்பார்த்ததுபோலவே ரோகித் அவுட்டாகி வெளியேற, சிறப்பாக ஆடி 92 ரன்கள் குவித்து, இந்திய அணியின் ரன்வேட்டைக்கு பெரும் பங்களிப்பை செய்தார். 

இந்த மூன்று பிளேயர்கள் மீது தான் அதிக கண் இருந்தது. இவர்கள் எப்போது இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் சிறப்பாக ஆடி இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறார்கள். இதனால் இப்போதைக்கு இந்திய அணி விக்னஸே இல்லாத அணியாக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.