சென்னை: சிவில் நீதிபதி பணிக்கான முதன்மைத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி காலிப்பணியிடங்கள், 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பாக இத்தேர்வை உயர் நீதி மன்றமே நடத்திவந்தது.
245 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு பணிகளில் உயர் நீதிமன்றம் பங்களித்து வருகிறது. அந்தவகையில் சிவில் நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூனில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இந்த தேர்வெழுத 12,037 பட்டதாரிகள் விண்ணப்பித் தனர். அவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு, தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுஅக்டோபர் 11-ம் தேதி வெளியானது. தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களின்படி 2,544 பேர் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப் பட்டனர்.
இதையடுத்து முதன்மைத் தேர்வு நவம்பர் 4, 5-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.இதற்கான ஹால்டிக்கெட் களை டிஎன்பிஎஸ்சி நேற்றுவெளியிட்டது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தில் சென்று தங்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன் பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள், நேர்முகத் தேர்வின் மூலம் இறுதி செய்யப்பட்டு பின்னர் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.