சென்னை: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து அமைச்சரின் உதவியாளர் மற்றும் திமுக எம்எல்ஏவின் உதவியாளர் உள்ளிட்ட 300 பேர் நுழைந்து, கல் குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுகவினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளிபெறக்கூடாது என்றும் மிரட்டியதாக தகவல்கள் வந்துள்ளன. திமுகவினரின் கோரிக்கையை ஏற்க மறுத்த கனிம வளத்துறை உதவி இயக்குநர், அவரது உதவியாளர் தாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வன்முறையைத் தடுக்க வந்த டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸாரை திமுகவினர் தாக்கியதாகவும், ஒப்பந்தப்புள்ளி வழங்க வந்தவர்களை அடித்துவிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன். திமுகவினரின் வன்முறைச் செயல்களுக்கு கடும்கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கல்குவாரிக்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த கவுள்பாளையம் ஊராட்சித் தலைவரும், தமிழக பாஜக தொழில் துறை மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன், மாவட்டத் தலைவர் முருகேசன் ஆகியோரை திமுகவினர் தாக்கிஉள்ளனர். மேலும், அரசு அதிகாரிகள், செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து எச்சரிக்கை விடுத்த பிறகும், திமுகவினர் கலைந்து செல்லாமல், ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. ஆட்சியருக்கே ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும். தவறினால், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பெரம்பலூரில் நவ.3-ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.