தற்பொழுது எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில் நாட்டு மக்களிடையே சுகாதாரப் பொறிமுறை தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனது முதலாவது நோக்கம் என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பாக அரசாங்க வைத்திய அதிகாரிகளுடன் (31) சுகாதார அமைச்சில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நாட்டின் சுகாதாரத் துறை ஒரு நிலையான சுகாதாரப் பொறிமுறை என்றும் இதில் அதை விட விசேட மனித வளம் செயற்படுவதாகவும் முறையான வழிமுறைகள் மற்றும் இலக்குடன் இந்தத் துறையின் தரத்தை உயர்த்துதல் சிக்கலான காரணி அல்ல என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவசியமான தீர்மானங்களுக்கான தீர்வுகளை தான் எடுப்பதாகவும், அதன்போது ஒவ்வொருவரையும் சந்தோஷப்படுத்த முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும் எல்லோருடைய தொழில் கௌரவத்தையும் பாதுகாத்தவாறு அதற்கு அவசியமான வசதிகளை செய்து கொடுப்பதுடன் சுகாதார பொறிமுறையின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயற்படுமாறும் அமைச்சர் கோரிக்கை முன்வைத்தார்.
இங்கு உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே, நீண்ட காலத்தின் பின்னர் சுகாதாரத் துறை தொடர்பான நிபுணத்துவம் பெற்ற ஒருவர் அமைச்சராகக் கிடைத்தமை சந்தோசமாளிப்பதாகவும், இந்த அமைச்சை பொறுப்பெடுத்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்தார்.
வைத்தியர்களின் சம்பளம், போக்குவரத்துக் கொடுப்பனவு, துறை சார் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவு, வைத்தியர்களின் பதவி மற்றும் பதவியுயர்வு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வழங்கல், வைத்திய பீடங்களில் காணப்படும் பிரச்சினைகள், சேவைக்காலம், மேற்பார்வை நடவடிக்கைகள், மருந்து போன்ற விடயங்கள் தொடர்பாக இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா, மேலதிக செயலாளர்களான விசேட வைத்தியர் சுனில் டி அல்விஸ், கீதாமணி கருணாரத்ன, உதவிப் பணிப்பாளர் நாயகங்களான விசேட வைத்தியர் லால் பனாபிடிய, விசேட வைத்தியர் சுதத் தர்மரத்ன, பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அதபத்து போன்ற பலருடன் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.