மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில், திமுக – அதிமுக கவுன்சிலர்கள் இடையே நேற்று வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் மீது நாற்காலி வீசப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம், அதன் தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக பேசினர். அப்போது, மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக தேங்கியுள்ள குப்பை அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன் வைத்து அதிமுக கவுன்சிலர்கள் பேசினர்.
மேலும், கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை நடத்தக் கூடாது, அதிகாரிகள் வந்த பின்னர் தான் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதால், கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
இதனால் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர் ஒருவர் கூட்ட அரங்கில் இருந்த நாற்காலியை எடுத்து அதிமுக கவுன்சிலர்களை நோக்கி வீசினார். அது யார் மீதும் விழாமல் கீழே விழுந்தது.
இதனால் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே கை கலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் நகராட்சி தலைவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், பிரச்சினை முடிவுக்கு வராததால் மன்றக்கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் ‘ஆல் பாஸ்’ முறையில் நிறைவேற்றப்பட்டதாக கூறி அவர் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் 9 பேரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை கோரி, அதிமுக கவுன்சிலர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திமுக கவுன்சிலர்கள் மேட்டுப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், திமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவரை ஒருமையில் பேசி தாக்க முயன்ற அதிமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதிமுக கவுன்சிலர்கள் அளித்த புகாரில், மன்றக் கூட்டத்தில் தங்களை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.