போபால்,மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், நோயாளியின் மூளையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது, நோயாளி பியானோ வாசித்தார்; ஹனுமன் சாலிசா சுலோகங்களை தெரிவித்தார்.
பீஹாரின் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது நபருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டது.
அவரை பரிசோதித்த ம.பி.,யின் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், மூளையில் உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் மோட்டார் கார்டெக்ஸ் பகுதியில் வளரும் கட்டியால் இந்தப் பிரச்னை ஏற்படுவதை கண்டறிந்தனர். இதைஅடுத்து, உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
வழக்கமாக, அறுவை சிகிச்சையின் போது, நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தப்படும். ஆனால், இந்த வகை அறுவை சிகிச்சையின் போது, நோயாளி விழிப்புடன் இருக்க வேண்டும். அவருடைய உடலியக்கங்களை கண்காணித்தபடியே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இதன்படி, சமீபத்தில் அந்த நபருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது.
அப்போது, அவரின் உடலியக்கத்தை கண்காணிக்க அவரிடம் டாக்டர்கள் பேச்சு கொடுத்தபடி இருந்தனர்.
மேலும், அறுவை சிகிச்சை நடந்த போது, அந்த நோயாளி பியானோ வாசித்தார். மேலும், ஹனுமன் சாலிசா சுலோகங்களையும் அவர் டாக்டர்களிடம் தெரிவித்தார்.
இந்த சமயத்தில் டாக்டர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘நோயாளியின் மூளையில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். எந்த பக்கவிளைவுகளும் இல்லை’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement