Doctor Vikatan: கருஞ்சீரகம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுவது உண்மையா… அது சகல நோய்களையும் தீர்க்கும் என்கிறார்களே…. அப்படியா….? அப்படியானால் சாதாரண சீரகத்திற்கு பதிலாக கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளலாமா… எப்படி எடுத்துக்கொள்வது?
– Anantha Raman, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி கருஞ்சீரகம் என்பது உணவுப்பொருளாகவோ, ஊட்டத்துக்கான பொருளாகவோ சாப்பிடக்கூடிய ஒன்று கிடையாது. கருஞ்சீரகத்தைச் சுற்றி ஏகப்பட்ட தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அதை அனைத்துவகையான நோய்களிலிருந்தும் காக்கும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம் என்பது போன்ற தகவல்கள் பரவுகின்றன. ஆனால் அந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானவை.
சில உணவுப்பொருள்களுக்கு உணவுக்கான தன்மை இருக்கும். உதாரணத்துக்கு, சீரகம் என்பது உணவுப்பொருளுக்கான தன்மை கொண்டது. அதை நீங்கள் தினமும் சாப்பிடலாம், உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கருஞ்சீரகத்தை அப்படிச் சாப்பிட முடியாது.

சில பொருள்களை காயகற்ப மூலிகைகள் என்று சொல்வார்கள். அதாவது அவற்றை தினமும் சாப்பிட முடியாவிட்டாலும் அவற்றுக்கென பிரத்யேக தன்மை இருக்கும். அதாவது, திரிபலா, கரிசலாங்கண்ணி போன்ற சில மூலிகைகளை குறிப்பிட்ட சில நாள்களுக்கு எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். கருஞ்சீரகம் என்பது அப்படிப்பட்ட மூலிகையும் இல்லை.
எல்லா மூலிகைகளும் எல்லோரும் பயன்படுத்த ஏதுவானவை என்கிறமாதிரி கருஞ்சீரகத்தையும் புரொமோட் செய்கிறார்கள். அது மிகவும் தவறு. நோய் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியது கருஞ்சீரகம். அது மிகப் பிரமாதமான மருந்துப் பொருள். பல நோய்களுக்கு மருந்து என்பதில் சந்தேகமில்லை. ஆனால் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

படித்த, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் யாரும் கருஞ்சீரகத்தை தேவையின்றி பரிந்துரைக்க மாட்டார்கள். எந்த மருத்துவத்திலும் தேவையற்ற மருந்தை எடுக்கக்கூடாது. அது மூலிகை மருந்துகளுக்கும் பொருந்தும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.