கொழும்பு: ”இலங்கையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூடுதலாக, 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது,” என, ‘நாம் 200’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நம் அண்டை நாடான இலங்கைக்கு, மலையக தமிழர்கள் வந்ததன், 200 ஆண்டு வரலாற்றை போற்றும் விதமாக, ‘நாம் 200, ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதில் பங்கேற்பதற்காகவும், பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காகவும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வந்துள்ளார்.
அவருடைய மூன்று நாள் பயணத்தின் ஒரு கட்டமாக, நேற்று நடந்த, நாம் 200 நிகழ்ச்சியில், மலையக தமிழர்களான தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி, நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
இலங்கை அரசு கடும் நிதி நெருக்கடியில் கடந்தாண்டு சிக்கியபோது, உடனடியாக இந்தியா, 33,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை அளித்தது. எங்களால் உங்களுடைய வலியை ஏற்க முடியாது. அதே நேரத்தில், மிகச் சிறந்த நண்பன் என்ற முறையில், உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை எங்களுடைய கடமையாக கருதினோம்.
ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் உதவி கிடைப்பதற்காக, இலங்கைக்கு முதல் முதலில் ஆதரவு கரம் நீட்டியது இந்தியாதான். இதைத் தொடர்ந்தே, சர்வதேச நிதியத்தின் உதவி கிடைப்பதற்கான முயற்சிகள் துவங்கின.
மிகச் சிறந்த நண்பன் என்ற முறையில், கடன் சீரமைப்பு விவாதங்கள் மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசுக்கு இந்தியா, தன் முழு ஆதரவையும் அளிக்கும்.
கடந்த ஜூலையில், நம் இரு நாட்டின் தலைவர்கள் இணைந்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டனர். இவற்றை செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இணைந்து செயல்படுவோம்.
முந்தைய சவால்களில் இருந்து விடுபட்டு, இரு நாடுகளும் செழிப்புடன் இருப்பதற்கு இணைந்து செயல்படுவோம். இந்தியாவை பூர்வீகமாக உடைய தமிழர்கள், இலங்கையின் நலனுக்காகவும், இரு நாடுகளின் நல்லுறவுக்கும் பாலமாக இருப்பர் என்று நம்புகிறேன்.
இலங்கை வாழ் தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் மூன்றாவது கட்டப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை, 3,700 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கை வாழ் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு, கூடுதலாக, 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என, பிரதமர் மோடி உறுதியளித்தார். அதன்படி, இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. இது இரு நாட்டு உறவில் சிறப்பான தருணமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர்.
முன்னதாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலைக்கு நிர்மலா சீதா ராமன் சென்றார். அங்குள்ள கோவிலில் அவர் வழிபட்டார். இதைத் தொடர்ந்து, திரிகோண மலையில், எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையை அவர் துவக்கி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்