வாரணாசி, உத்தர பிரதேசத்தில் பனாரஸ் ஹிந்து பல்கலை மாணவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதை கண்டித்து வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி., மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலை செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில் வாரணாசி ஐ.ஐ.டி.,யும் அமைந்துஉள்ளது.
பனாரஸ் ஹிந்து பல்கலையில் பயிலும் மாணவி ஒருவர், இரு தினங்களுக்கு முன் அங்குள்ள கோவில் அருகே தன் தோழியுடன் நின்று பேசிக் கொண்டுஇருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், மாணவியை தனியாக இழுத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டது.
அவரின் ஆடையை களைந்து வீடியோ எடுத்ததுடன், 15 நிமிடங்களுக்குப் பின் அந்தப் பெண்ணின் மொபைல்போன் நம்பரை பெற்று அவர்கள் தப்பிச் சென்றனர்.
இது குறித்து மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பல்கலை வளாகத்தில் உள்ள ஐ.ஐ.டி., மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலை, ஐ.ஐ.டி.,யைச் சேராத வெளியில் இருந்து வந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், இரு நிறுவனங்களின் வளாகங்களுக்கு நடுவே தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
அதேசமயம், வெளிநபர்கள் பல்கலை உள்ளே வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
‘இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனே எங்களுக்கு முக்கியம்’ என, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது-.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்