கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் `இந்தியன் 2′ படத்தின் இன்ட்ரோ வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. நவம்பர் 7ம் தேதி கமலின் பிறந்த நாள் என்பதால், இன்றிலிருந்து அதற்கான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முதல் பந்தாக இன்று ‘இந்தியன் 2’ இன்ட்ரோ வீடியோ வெளியாகியிருக்கிறது. ‘விக்ரம்’ படத்தை அடுத்து ‘இந்தியன் 2’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கமல். இதனையடுத்து மணிரத்னம், அ.வினோத் ஆகியோரின் படங்களில் நடிக்கிறார். இதில் வினோத் இயக்கும் படம் கமலின் 233வது படமாகும். இது ஆக்ஷன் த்ரில்லர் என்ற பேச்சு இருக்கிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்குமென தெரிகிறது. ‘விக்ரம்’ படத்தைப் போல இதிலும் மல்டி ஸ்டார்கள் கூட்டணி உருவாகிறது. யாரும் எதிர்பார்த்திடாத இரண்டு பெரிய ஸ்டார்கள் படத்தில் இருக்கிறார்கள், அதில் ஒன்று சிவராஜ்குமார் என்றும் சொல்கிறார்கள்.

மிலிட்டரி பின்னணியில் நடக்கும் கதை இது என்றும், பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கலாம் என்கிறார்கள். அ.வினோத்தின் படம்தான் முதலில் தொடங்கும் என்ற பேச்சு இருந்தது. ஆனால், சத்தமே இல்லாமல் மணிரத்னம் படத்தின் பூஜையும் நடந்தது. இதன் அப்டேட்டும் 7ம் தேதிக்குள் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள். ஏற்கெனவே இதன் படப்பூஜை வீடியோ வெளியாகி, வைரலானது நினைவிருக்கலாம்.
கமலின் 234வது படமாக மணிரத்னம் இயக்கும் படம் உருவாகிறது. ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்திருப்பதால், எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு ரவி.கே.சந்திரன், ஸ்டன்ட் அன்பறிவ், எடிட்டர் ஶ்ரீகர்பிரசாத் என மணியின் ஆஸ்தான டீம் இணைந்திருக்கிறது. படத்தின் முன்னோட்ட வீடியோ கமலின் பிறந்த நாளன்று வெளியாகிறது.

இதற்கிடையே பிரபாஸுடன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் அமெரிக்கா, ஹைதராபாத் என மாறிமாறிப் போய்க்கொண்டிருக்கிறது. தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப், தீபிகா படுகோன், திஷா பதானி நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார் கமல். கதையின் மெயின் வில்லனே கமல்தான் என்பதால், அதிக நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கமல். அவரின் பிறந்தநாளன்று அந்தப் படத்துக்கான அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிறது.
இதற்கிடையே பிக் பாஸ் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு புதிய படங்களைப் பற்றிய அப்டேட்களை மட்டும் வெளியிடுகின்றனர். அதன் பிறகு மணிரத்னம், அ.வினோத் இருவரின் படங்களையும் ஒரே சமயத்தில் நடித்துக் கொடுத்துவிடத் திட்டமிட்டிருக்கிறார் கமல். தீபாவளி முடிந்து படப்பிடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்குகிறது என்கிறார்கள்.