நடப்பு உலகக்கோப்பையில் யாருமே எதிர்பார்க்காமல் அதிக எதிர்பார்ப்புமிக்க போட்டியாக மாறியிருந்த ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து போட்டி நடந்து முடிந்திருக்கிறது.
நெதர்லாந்தும் ஆப்கானிஸ்தானும் இந்த உலகக்கோப்பையில் தங்களை விட எல்லாவிதத்திலும் வலுமிக்க போட்டியாளர்களை வீழ்த்தி அசத்தியிருக்கின்றனர். இரு அணிகளுக்குமே இன்னும் அரையிறுதி வாய்ப்பும் இருந்ததால் இந்தப் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட சுவாரஸ்யம் இந்தப் போட்டியில் இல்லை. ஆப்கானிஸ்தான் ரொம்பவே ஆதிக்கமாக இந்தப் போட்டியை வென்று தங்களுக்கான அரையிறுதி வாய்ப்பையும் பிரகாசமாக்கியிருக்கின்றனர்.

லக்னோவில் நடந்த இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்தான் டாஸை வென்றிருந்தார். முதலில் நெதர்லாந்து பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். கடந்த சில போட்டிகளாக சேஸிங்கிலும் கலக்கி வரும் ஆப்கானிஸ்தானுக்கு இந்த முடிவு சாதகமாகவே இருந்தது. நெதர்லாந்து அணி தொடக்கத்தில் நன்றாகவே ஆடியது. மேக்ஸ் ஓடாட்டும் ஆக்கர்மென்னும் 70 ரன்களுக்குச் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த இருவருமே ஒரு கட்டத்தில் ரன் அவுட் ஆகி வீணாக வெளியேறினர். இவர்கள் இருவரும் அவுட் ஆன பிறகு நெதர்லாந்து அணியால் பெரிதாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
முஜீப், நபி, ரஷீத் கான், நூர் என நான்கு ஸ்பின்னர்களை ஆப்கானிஸ்தான் பயன்படுத்தியது. ஸ்பின்னர்கள் மட்டுமே 38.3 ஓவர்களை வீசியிருந்தனர். 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் ரன் அவுட்டாக தாங்களாகவே வந்து இரையாகக் கொடுத்தது நெதர்லாந்து. இறுதியில் அந்த அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
180 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. அவர்களின் வழக்கப்படியே இந்த இந்த ஓவர்களில் இவ்வளவு ரன்களை அடித்திருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து டார்கெட்டை எளிமையாக சேஸ் செய்து முடித்தனர்.

நம்பர் 3-ல் வந்த ரஹ்மத்தும் நம்பர் 4-ல் வந்த கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதியும் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியிருந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கெல்லாம் பதில் மரியாதை கொடுத்து விடைபெற்றனர் ஆப்கன் வீரர்கள்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இன்னும் ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த இரண்டுமே அவர்களுக்கு மாபெரும் சவாலாக இருக்கும். என்ன செய்யப்போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆப்கானிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படியிருக்கிறது? உங்கள் கருத்தை கமென்ட்டில் சொல்லுங்கள்.