கொழும்பு,இந்தியா – இலங்கை இடையேயான நீண்ட கால புத்த தொடர்புகளை வலுப்படுத்த, அந்நாட்டுக்கு, 125 கோடி ரூபாய் மானியத்தை, இந்தியா வழங்கி உள்ளது.
பொருளாதாரம்
நம் அண்டை நாடான இலங்கைக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து, இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சந்திப்பின் போது, இந்தியா – இலங்கை இடையேயான நீண்ட கால புத்த தொடர்புகளை வலுப்படுத்த, அந்நாட்டுக்கு, 125 கோடி ரூபாய் மானியத்தை இந்தியா வழங்குவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான ஒப்பந்தம், அதிபர் விக்ரமசிங்கே – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் கையெழுத்தானது.
கலாசார பரிமாற்றம்
இந்த ஒப்பந்தம் வாயிலாக, புத்த கட்டடங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல், திறன் மேம்பாடு, கலாசார பரிமாற்றம், தொல்பொருள் ஒத்துழைப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கிடையே நேற்று, யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற நல்லுார் கந்தசுவாமி கோவிலுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்று வழிபட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்