ரபா : இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் துாதரக அளவிலான முயற்சி மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், காசா பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் நேற்று முன்னேறி சென்று தாக்குதலை தொடர்ந்தன.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தினத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 25 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போரில், பாலஸ்தீன தரப்பில் 3,600 குழந்தைகள் உட்பட, 8,800 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 22,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
காசா பகுதிக்குள் தரைவழியே ஊடுருவிய இஸ்ரேல் படையினர் தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். மனிதாபிமான அடிப்படையில் போரை சிறிது நாட்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு அரபு நாடுகள் துாதரக அளவில் முயற்சி செய்து வருகின்றன.
இதன் பலனாக, காசா பகுதியின் ரபா எல்லையை, எகிப்து நேற்று முன்தினம் முதல்முறையாக திறந்தது. அந்த வழியே வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள, 335 பேர் காசாவில் இருந்து எகிப்துக்கு சென்றனர்.
பாலஸ்தீனத்தை சேர்ந்த 76 நோயாளிகள் சிகிச்சைக்காக எகிப்து பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போரை சிறிது நேரம் நிறுத்தி வைப்பதால், காசா பகுதிக்குள் நிவாரண பொருட்களை அதிக அளவில் அனுப்பி வைக்க முடிவதோடு, பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்பும் உருவாகும் என, அமெரிக்க வெள்ளை மாளிகை கோரிக்கை விடுத்துள்ளது.
போர் நிறுத்த முயற்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் ஆதரவு அரபு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அதே நேரம், காசா பகுதிக்குள் தரை வழி ஊடுருவல் மற்றும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. மூன்று திசைகளில் காசா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவி வருகிறது.
வழி நெடுகிலும் உள்ள பாலஸ்தீன மக்களை தென் பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தபடி ஊடுருவி வருகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் சுரங்கங்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்றும் தாக்குதலை தொடர்ந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்