சேலம்: ஏற்காட்டில் உள்ள கொடிகாடு மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம் நீடிக்கிறது. மலைக்கிராம மக்களின் சோக வாழ்க்கையை மாற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடிகாடு கிராமம். இங்கு 40 குடியிருப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் வசித்துவரும் அண்ணாமலை என்பவர் முதுமை காரணமாக நோய்வாய்பட்டு அவதியுற்று வந்தார். எழுந்து நடக்க முடியாத அண்ணாமலையை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல சாலை வசதியில்லாததால் வாகனங்களில் அழைத்துச் செல்ல முடியாத நிலையில் குடும்பத்தினர் கவலையடைந்தனர்.
இதையடுத்து, நோயின் பிடியில் துடித்த அண்ணாமலையை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் ஊர் மக்களின் உதவியை நாடினர். தொடர்ந்து, கொடிகாடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மூங்கில் கம்பில் தொட்டில் கட்டி அதில் அண்ணாமலையை படுக்க வைத்து, பாதை வசதியில்லாத காட்டு வழித்தடத்தில் சில கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
கொடிகாடு கிராம மக்களின் சோக வாழ்க்கையை அவ்வூர் இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் மலைக்கிராம மக்களின் சோக வாழ்க்கைக்கு தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கொடிகாடு கிராமத்தைச் சேர்ந்த குமார் கூறியதாவது: பல ஆண்டுகளாக கொடிகாடு கிராமத்துக்கு சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமத்தின் ஊடே வாழ்ந்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக்கு செல்லும் பாதையின் குறுக்கே தனியார் எஸ்டேட் உரிமையாளர் வேலி அமைத்து விட்டார்.
பாதை அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி அடைத்து விட்டார். இதனால், சாலை வசதியில்லாமல், காட்டு வழித்தடத்தில் கரடு முரடான பாதையை கடந்து சென்று வருகிறோம். வழியில் முட்புதர்கள் உள்ளதால் விஷ ஜந்துக்களின் அச்சத்துடனேயே தினமும் கடந்து சென்று வருகிறோம்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தேர்தலில் வாக்களிக்க போவதில்லை கிராம மக்கள் அறிவித்து அனைவரது வீடுகளிலும் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மக்களின் எதிர்ப்பை அறிந்த அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடனடியாக கொடிகாடு கிராமத்துக்கு சென்று மக்களை சந்தித்து, தேர்தல் முடிந்த கையோடு சாலை வசதி செய்து தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால், தேர்தல் முடிந்து 3 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையிலும் மலைக்கிராம மக்களுக்கு எந்த விடிவுகாலமும் கிடைக்கவில்லை. இன்றளவும் கரடு முரடான பாதையில் கால்நடையாகத்தான் சென்று வருகிறோம். கிராம மக்களின் நலன் கருதி எங்களது கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.