ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசியாவுக்கான தூதுக்குழுவினர் சபாநாயகருடன் சந்திப்பு

ஐரோப்பிய பாராளமன்றத்தின் பிரதித் தலைவர் ஹைடி ஹாட்டேலா தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தெற்காசியத் தூதுக் குழுவினர் (01) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தனவைப் பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

இந்த ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவில் போலாந்து, பின்லாந்து, ஜேர்மனி மற்றும் லித்துவேனியா போன்ற நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார். அண்மைக் காலத்தில் பல சாதகமான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் ஊழல் ஒழிப்புச் சட்டம் நிதிக் கட்டுப்பாட்டை வினைத்திறனாகவும், வெளிப்படையான முறையிலும் முன்னெடுப்பதற்காகப் பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுதல் போன்றவை உள்ளடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், நல்லிணக்க செயற்பாடுகள் போன்றவை குறித்தும் இந்தக் குழுவினர் கலந்துரையாடினர்.

இந்தத் தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணமொன்றையும் மேற்கொண்டிருந்தனர். அதேநேரம், இந்தத் தூதுக்குழுவினர் இலங்கை-ஐரோப்பிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்திருந்ததுடன், சபாநாயகரினால் வழங்கப்பட்ட மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கௌரவ விஜேதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ டயனா கமகே, கௌரவ தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பைசல் காசிம், கௌரவ கபில அதுகோரல ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குரலத்ன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.