புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பெரிய காலாப்பட்டு மாத்தூர் செல்லும் சாலையில் பிரபல மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஷிப்ட் முறையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 ஷிப்ட் முறையில் ஒரு ஷிப்ட்டுக்கு 300 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (நவ.4) இரவு தொழிற்சாலையில் இருந்த பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் எழுந்தத் தீ அருகில் இருந்த மற்றொரு பாயிலரில் பரவி அந்த பாய்லரும் வெடித்து சிதறியது. இதன் காரணமாக தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து காலாப்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து புதுச்சேரி, கோரிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பல மணிநேர போராட்டத்திற்கு பின்பும், தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் மூன்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது. அவர்கள் அருகில் உள்ள பிம்ஸ் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து காலப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு ஷிப்ட் மாறும் நேரம் என்பதால் பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டது.