போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து மாணவர்களை பாதுகாக்க தேசிய மாணவப் படையணியின் மூலம் சமூக புலனாய்வு பிரிவு அமைக்க திட்டம்

  • தேசிய மாணவப் படையணியின் வருடாந்த ’ஹெர்மன்லூஸ், அணிவகுப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு மரியாதை அணிவகுப்பு
  • பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

மாணவர்களின் ஆக்கத்திறன் மூலம் இளைஞர்களின் பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் சமூக புலனாய்வுப் பிரிவை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் மூலம் போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து நமது பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மேலும், நவீன தொழில்நுட்ப முறைகள் மூலம் நமது திறமைமிக்க மாணவச் சிப்பாய்களின் செயல்பாடுகளை பிரபலப்படுத்தவும் ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (நவம்பர் 02) ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற ஹெர்மன்லூஸ், டி சொய்சா சவால் கிண்ணம் – 2023இன் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரமுகர்களை தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா வரவேற்றார்.

தேசிய மாணவர் படையணி நாட்டிற்காக செய்த தியாகங்களை பாராட்டும் வகையில் 2023ஆம் ஆண்டு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் தேசிய மாணவப் படையணிக்கு ஜனாதிபதி வர்ணங்கள் மற்றும் படை வர்ணங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது அணிவகுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மாணவர் படையணியின் ஹெர்மன்லூஸ், டி சொய்சா சாம்பியன்ஷிப்பை கொழும்பு ஆனந்த கல்லூரியும் கண்டி பெண்கள் உயர் கல்லூரியும் வென்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் தென்னகோன் அவர்கள் ஹெர்மன்லூஸ், டி சொய்சா படைப்பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கி வைத்தார்.

அணிவகுப்பு மரியாதையின் பிறகு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், தேசிய மாணவர் படையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.

மேலும், கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தேசிய மாணவர் படையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை கல்வி அமைச்சுடன் இணைத்தமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது விசேட நன்றியினைத் தெரிவித்தார்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் கலந்து கொண்டு சிறப்பாகப் போட்டியிட்ட அனைத்துப் பாடசாலை மாணவ படையணிகளுக்கும், மேலும் அவர்களை இச்செயல்பாடுகளில் ஈடுபட ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்கள், கல்வி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) விமானப்படை தளபதி, கடற்படையின் பிரதம அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அரச அதிகாரிகள், ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மற்றும் பயிற்றுவிப்பாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், அழைக்கப்பட்டவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.