கான் யூனிஸ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ராணும் முழுவதுமாக முற்றுகையிட்டது. ‘தற்காலிக போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை’ என, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடந்த மாதம் 7ம் தேதி துவங்கிய போரில், பாலஸ்தீன தரப்பில் 3,500 குழந்தைகள் உட்பட 9,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பகுதியில் உள்ள சுரங்கங்களில் பதுங்கியபடி ஹமாஸ் பயங்கரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். இவர்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக, வான்வழி தாக்குதலை தொடர்ந்து, தரை வழியாகவும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேற துவங்கியது.
தற்போது, காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. இதனால் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, போரை தற்காலிமாக நிறுத்தும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்தார்.
இதை வலியுறுத்துவதற்காக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், மூன்றாவது முறையாக நேற்று இஸ்ரேல் வந்தார். ஆனால், தற்காலிக போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காசாவின் வடக்கு எல்லையில் உள்ள லெபானை சேர்ந்த ஹெஜ்புல்லா படையினர் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காசா – எகிப்து இடையிலான எல்லை பகுதி திறக்கப்பட்டதை அடுத்து கடந்த இரண்டு நாட்களில், இரட்டை குடியுரிமை மற்றும் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள, 800 பாலஸ்தீனர்கள் எகிப்து சென்றனர்.
யு.ஏ.இ., அதிபருடன் மோடி பேச்சு!
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் உடன், நம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். அப்போது, இஸ்ரேல் – ஹமாஸ் நிலவரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். அனைவரின் நலன் கருதி, பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சூழ்நிலைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், நீடித்த பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை அவசியம் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்