திருவனந்தபுரம், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தன் சுயசரிதை புத்தகத்தில், முன்னாள் தலைவர் சிவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதியிருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து, புத்தக வெளியீட்டை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை வரலாறு
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் சோம்நாத். கேரளாவைச் சேர்ந்த இவர், ‘நிலவு குடிச்ச சிம்மங்கள்’ என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாற்றை நுாலாக எழுதியுள்ளார்.
அதில், முன்னாள் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சிவன் குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகளை சோம்நாத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
அந்த புத்தகத்தில் சோம்நாத் எழுதியுள்ளதாக கூறப்படுவதாவது:
இஸ்ரோவின் தலைவராக நான் வருவதை தடுக்க, முன்னாள் தலைவர் சிவன் முயற்சித்தார். 2018 -ல் கிரண் குமார் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றபோது, 60 வயது முடிந்து பணி நீட்டிப்பிலிருந்த சிவனின் பெயருடன், என் பெயரும் தலைவர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அப்போது எனக்கு இஸ்ரோ தலைவர் பதவி உறுதியாக கிடைக்கும் என்று கருதினேன். ஆனால் சிவனுக்கு தான் அப்பதவி கிடைத்தது. தலைவரான பின்பும், அவர் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் பொறுப்பை கைவசம் வைத்திருந்தார்.
எனக்கு அந்த பதவி அப்போது நியாயமாக கிடைத்திருக்க வேண்டும். நான் நேரில் பார்த்து கேட்ட போதும், சிவன் சரியான பதில் கூறவில்லை.
கடைசியில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் சுரேஷ் தலையிட்டதன் காரணமாக, ஆறு மாதங்களுக்கு பின் எனக்கு அப்பதவி கிடைத்தது.
சர்ச்சை
மூன்றாண்டுகள் இஸ்ரோவின் தலைவராக இருந்த பின் ஓய்வு பெறுவதற்கு பதிலாக அப்பணியில் நீடிக்க சிவன் முயற்சித்தார். சந்திரயான்.-.2 செலுத்தும் நிகழ்வுக்கு பிரதமர் மோடி வந்தபோது, அவரை வரவேற்கும் பட்டியலில் இருந்து என்னை சிவன் நீக்கி விட்டார்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் சோம்நாத் எழுதியுள்ளதாக கூறப்பட்டது.
இந்த புத்தகம் விரைவில் வெளியாக இருந்த நிலையில், சோம்நாத் நேற்று காலை கூறுகையில், ”ஒரு நிறுவனத்தில் உயர் பதவியை அடைவதற்கான பயணத்தின் போது, ஒவ்வொரு நபரும் சில வகையான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இது சம்பந்தமாக எந்தவொரு நபரையும் நான் குறிவைக்கவில்லை,” என்றார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே சுயசரிதை புத்தக வெளியீட்டை நிறுத்தி வைப்பதாக சோம்நாத் அறிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்